'Squid Game' வெப் சீரிஸில் நடித்த ஓசங் சோ, இந்தாண்டுக்கான கோல்டன் குளோப் விருது பெற்றுள்ளார்.
தென்கொரியாவின் சிரன் பிக்சர்ஸ் தயாரித்த 'Squid Game' வெப் சீரிஸ் கடந்த செப்டம்பர் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியானது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் உலகில் அதிகம் பேர் விரும்பி பார்த்த வெப் சீரிஸ் என்ற சாதனையையும் 'Squid Game' படைத்தது.
'Squid Game' வெப் சீரிஸுக்கு இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதை 'Squid Game' நடிகர் பெற்றுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் சிறந்த தொடர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் ஆகிய பிரிவுகளுக்கான போட்டியில் ‘ஸ்குயிட் கேம்’ தொடர் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், ‘ஸ்குயிட் கேம்’ தொடரில் Player 001 எனும் கேரக்டரில் நடித்த ஓசங் சோ சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
தென் கொரியாவிலிருந்து கோல்டன் குளோப் விருது பெரும் முதல் நடிகர் ஓசங் சோ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டுக்கான கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த திரைப்படமாக 'Belfast’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. 'The West side story' திரைப்படம் 3 விருதுகளைப் பெற்றுள்ளது.