கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்தே ஏகப்பட்ட திரையுலக பிரபலங்களின் மறைவுகள் அடுத்தடுத்து நிகழத் தொடங்கின. அதில் இந்திய சினிமா உலகின் மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்பட்டது பின்னணி பாடகரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் மறைவு.
அதன் பிறகு 2021ல் தென்னிந்திய சினிமாத்துறையைச் சேர்ந்த கலைஞர்களின் இழப்பு திரையுலக ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. அதன்படி கடந்த ஆண்டு மறைந்த முக்கிய மற்றும் மூத்த திரைப்பிரபலங்கள் குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
1) உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி
பழம்பெரும் நடிகரான இவர் தமிழ், மலையாள மொழிகளில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். தமிழில் பம்மல் கே சம்மந்தம், சந்திரமுகி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டே என பல படங்களில் தாத்தா கேரக்டரில் நடித்திருக்கிறார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி திடீர் உடல்நலக் குறைவால் ஜனவரி 20ம் தேதி உயிரிழந்தார். 73வது வயதில்தான் திரையுலகுக்கு அறிமுகான உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி 18 ஆண்டுகளாக மக்களை சிரிக்க வைத்தவர் ஆவார்.
2) இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்
இயற்கை, ஈ, பேராண்மை என தனித்துவமான படங்களை தமிழ் சினிமா உலகுக்கு கொடுத்ஹவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த லாபம் படத்தின் பணிகளின் போது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் தீவிர உடல்நலக் குறைவுக்கு ஆளானார். பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மார்ச் 14ம் தேதி காலமானார். அவரது இழப்பு திரையுலகத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
3) நடிகர் விவேக்
தன்னுடைய நகைச்சுவையான வசனங்கள் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் அரசியல் ரீதியாகவும், சமூகத்தின் பார்வையையும் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நடிகர் விவேக். ஆரோக்கியத்தை பேணுவதிலும் சுற்றுச்சூழலை காப்பதிலும் பெரும் நாட்டம் கொண்டவராக இருந்தார். தனது வாழ்வின் கடைசி நாள் என்று தெரியாமலேயே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஆனால் எதிர்பாராத விதமாக ஏப்ரல் 17ம் தேதி விவேக் மாரடைப்பால் உயிரிழந்தார் என்று வந்த செய்தி திரை ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. பல பத்தாண்டுகளாக
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சின்ன கலைவாணர் விவேக்கின் மறைவு செய்தி மக்களை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியது.
4) இயக்குநர் தாமிரா
2010ல் வந்த ரெட்டை சுழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாமிரா மறைந்த பழம்பெரும் இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் ஆவார். அதன் பின்னர் 2018ல் சமுத்திரகனி நடிப்பில் ஆண் தேவதை என்ற படத்தை இயக்கினார். இதனிடையே பல சின்னத்திரை தொடர்களையும் தாமிரா இயக்கியிருக்கிறார்.
கொரோனா தொற்றுக்கு ஆளான தாமிரா தீவிர சிகிச்சை பிரிவில் சுமார் 2 வாரங்களாக அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 27ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.
5) இயக்குநர் கே.வி.ஆனந்த்
பத்திரிகை உலகில் தொடங்கிய கே.வி.ஆனந்தின் பயணம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக முடிந்திருக்கிறது. ஸ்டில் கேமிரா மேனாக இருந்து சினிமாவில் ஒளிப்பதிவாளராக வந்து பின்னர் இயக்குநராகவும் வளர்ந்தவராவார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான படங்கள் எதுவும் ஒன்றுக்கு ஒன்று சலைத்தது இல்லை என்றளவுக்கே இருக்கும்.
தனித்துவமான கதைக்களத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தவர் கே.வி.ஆனந்த். காப்பான் படத்துக்கு பிறகு அடுத்த படத்துக்கான கதை உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் திடீரென உடலநலக் குறைவு ஏற்பட்டு தானாக காரை இயக்கி மருத்துவமனையில் சேர்ந்தார் கே.வி.ஆனந்த்.
இந்நிலையில் திடீர் மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 30ம் தேதி கே.வி.ஆனந்த் காலமானார். அவரது மறைவு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியது.
6) நடிகர் பாண்டு
கொரோனா பரவலின் இரண்டாவது அலையின் கோரமுகம் நாடெங்கும் தென்பட்ட போது அதன் தாக்கத்தில் இருந்து நடிகர் பாண்டுவும் தப்பவில்லை. காதல் கோட்டை, ஏழையின் சிரிப்பில், உள்ளத்தை அள்ளித்தா, கில்லி என பல்வேறு தமிழ் படங்களில் நடித்தவர் பாண்டு. வித்தியாசமான பாவணைகளில் ரசிகர்களை அசத்திய பாண்டு மே 6ம் தேதி கொரோனா பாதிப்பால் காலமானார்.
7) நடிகர் மாறன்
2004ல் வந்த விஜய்யின் கில்லி படம் மூலம் ஆதிவாசி என்ற கதாப்பாத்திரத்தில் அறிமுகமான மாறன் 'டிஷ்யூம்', 'தலைநகரம்', 'வேட்டைக்காரன்', 'கே.ஜி.எஃப்' உட்பட பல்வேறு தமிழ் படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். நடிப்பது மட்டுமல்லாமல் கானா பாடகராகவும் மேடை கச்சேரிகளும் நடத்தி வந்தார். 48 வயதே ஆன மாறன் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மே 11ம் தேதி உயிரிழந்தார்.
8) நிதீஷ் வீரா
புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, கபாலி, காலா, அசுரன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிதீஷ் வீராவும் கொரோனா தொற்றால் மே 17ம் தேதி உயிரிழந்தார்.
9) பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த்
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான ஸ்ரீகாந்த் வெண்ணிற அடை படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சுமார் 44 ஆண்டுகளுக்கு இடைவிடாமல் ஹீரோ, காமெடியன், வில்லன் என எக்கச்சக்கமான கதாப்பாத்திரங்களில் நடித்து அசத்தியவர் ஸ்ரீகாந்த்.
2009ம் ஆண்டு வெளியான குடியரசு படத்துக்கு பிறகு வயது மூப்பால் எந்த படங்களிலும் ஸ்ரீகாந்த் நடிக்கவில்லை. இப்படி இருக்கையில் அக்டோபர் 12ம் தேதி உடல்நலக் குறைவால் ஸ்ரீகாந்த் காலமானார்.
10) நடன இயக்குநர் சிவசங்கர்
10க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராக இருந்தவர் சிவசங்கர். இளசுகளின் ஜாலி கீதமாக இருந்த மன்மதராசா என்ற பாடலுக்கு நடனம் அமைத்தவரும் இவர்தான். மகதீரா படத்தில் இடம்பெற்ற தீர தீர பாடலுக்காக தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார்.
நடன இயக்குநராக மட்டுமல்லாமல் வரலாறு, பரதேசி, அரண்மனை, கஜினிகாந்த், கண்ணா லட்டு திண்ண ஆசையா உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நவம்பர் 28ம் தேதி உயிரிழந்தார்.
11) நெடுமுடி வேனு
மலையாள சினிமா உலகின் பிரபல நடிகராக இருந்த நெடுமுடி வேனு தமிழிலும் இந்தியன், அந்நியன், சர்வம் தாளமயம் என பல்வேறு படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து பிரபலமாகியுள்ளார். 3 தேசிய விருதுகள், 6 மநில அரசின் விருதுகளுக்கு சொந்தமான 73 வயதான இவரையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. சிகிச்சைக்கு பிறகு வைரஸில் இருந்து குணமாகினாலும் திடீர் உடல்நலக்குறைவால் அக்டோபர் 10ம் தேதி திருவனந்தபுரத்தில் காலமானார் நெடுமுடி வேனு.
12) மாணிக்க விநாயகம்
பரதநாட்டிய ஆசிரியரான வழுவூர் பி.ராமையா பிள்ளையின் மகனான மாணிக்க விநாயகம் தமிழ் திரைப்படங்களில் பாடகராக மட்டுமல்லாமல் ஏகப்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியவர். இதுவரையில் சுமார் 800க்கும் மேற்பட்ட படங்களில் பாடியிருக்கிறார். 77 வயதான மாணிக்க விநாயகம் டிசம்பர் 27ம் தேதியன்று உடல்நலக்குறைவால் காலமானார்.