2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரைத்துறையே மீண்டு வந்த ஆண்டாக 2021 அமைந்திருந்தது. மலையாள மொழியில் இந்தாண்டு பல நல்ல திரைப்படங்களில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன.
அந்தவகையில், 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் நாம் மிஸ் செய்யக்கூடாத மலையாள திரைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
Operation Java
தருண் மூர்த்தி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பாலு வர்கீஸ், லுக்மன் லுக்கு, இர்ஷாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கேரளாவில் நடந்த உண்மையான சைபர் க்ரைம் குற்றங்கள் பற்றிய விரிவான படமாக இது அமைந்தது.
தி கிரேட் இந்தியன் கிச்சன்
ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவு என்ன என்பதைச் சொல்லியிருந்த படம் இது.
த்ரிஷ்யம் 2
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர் அனில், ஆஷா சரத் உள்ளிட்டோர் நடித்த படம் இது. முதல் பாகத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து சஸ்பென்ஸ் த்ரில்லரான இரண்டாம் பாகமும் பெரும் ஹிட் அடித்தது.
கள
ரோஹித் வி.எஸ் இயக்கத்தில் டொவினோ தாமஸ், திவ்யா பிள்ளை, லால் ஆகியோர் நடித்த படம். கேரளாவில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை உருவாக்கினர்.
ஆணும் பெண்ணும் (ராணி)
உன்னி ஆர் எழுதிய சிறுகயைத் தழுவி ஆஷிக் அபு இயக்கிய குறும்படம் ராணி. இது ஆணும் பெண்ணும் ஆந்த்தாலஜியின் ஒரு பகுதியாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
ஆர்க்கறியாம்
ஷானு ஜோன் வர்கீஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பிஜு மேனன், பார்வதி ஆகியோர் நடித்தனர். இயல்பான ஒரு த்ரில்லர் படமாக ஈர்த்தது இப்படம்.
ஜோஜி
திலீஷ் போத்தன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த படம் ஜோஜி. வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’ மற்றும் 1985ஆம் ஆண்டு கே.ஜி ஜார்ஜ் இயக்கிய ‘இரகல்’ திரைப்படம் ஆகியவற்றின் சாரத்தை தழுவி உருவாக்கியுள்ள படமே ‘ஜோஜி’.
மாலிக்
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில், நிமிஷா சஜயன், வினய் ஃபோர்ட் உள்ளிட்டோர் நடித்த படம். 2009ல் கேரளாவின் பீமாபள்ளியில் நடந்த கலவரத்தையும் காவல்துறை துப்பாக்கிச் சூட்டையும் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் இது.
காணேக்காணே
மனு அசோகன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, ஐஸ்வர்ய லட்சுமி, ஸ்ருதி ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்த படம். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
திங்களாச்ச நிச்சயம்
சென்னா ஹெட்ஜ் இயக்கிய இப்படமும் ரசிகர்களை ஈர்த்தது.
கனகம் காமினி கலகம்
ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கிய இப்படத்தில் நிவின் பாலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடித்தனர்.
சுருளி
லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கிய இப்படம் டம் சமீபத்தில் Sony LIV ஓடிடி தளத்தில் வெளியாகி விமர்சனரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றது.
மின்னல் முரளி
பாசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான ‘மின்னல் முரளி’ நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாயாட்டு
மார்ட்டின் பிரகாட் இயக்கத்தில் குஞ்சக்கோ கோபன், நிமிஷா சஜயன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடித்த இப்படம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்வை ஏற்படுத்திய படமாக அமைந்தது.