Spider Man: No way home கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
சோவியத் யூனியன்காரர்களை வில்லனாக்க முடியாத சூழலை அடைந்து விட்டதாலும் ஏலியன்களைக் காட்டிலும் ஏலியன்களைப் பற்றி அதிகம் பேசிவிட்டதாலும் சமீபகால ஹாலிவுட் திரைப்படங்கள் புதிய ஒரு விஷயத்தைப் பிடித்திருக்கிறது. அறிவியல்!
காலப்பயணம், இருவேறு உலகங்கள் என்பவற்றைத் தாண்டி அறிவியலின் ரசமான விஷயமான multiverse என்கிற கருதுகோளை ஸ்பைடர் மேனின் இந்தப் படம் கையாண்டிருக்கிறது.
எனில் ஸ்பைடர் மேன் அறிவியல் படமா?
இல்லை.
போகிறபோக்கில் ஸ்ட்ரிங்க்ஸ் தியரி, மேத்ஸ் என்றேல்லாம் பேசிவிட்டு வழக்கமான வில்லன்களுடன் சடுகுடு ஆடியிருக்கும் படம் தான் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்.
இதுவரை மூன்று ஸ்பைடர் மேன்கள் இந்த தலைமுறைக்கு அறிமுகாகியிருக்கின்றனர். டோபி மேக்வொயர், ஆண்ட்ரூ கார்ஃபீல்டு மற்றும் தற்போதைய டாம் ஹாலண்ட் ஆகியோர் ஸ்பைடர் மேன்களாக பிரபலமடைந்தவர்கள். இந்தப் படத்தில் நடித்திருப்பவர் டாம் ஹாலண்ட். ஏற்கனவே டோபி மெக்வொயர் நடித்த ஸ்பைடர் மேன் படங்கள் நவீன தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட காட்சிகளால் பெரும் வரவேற்பைப் பெற்றது. மூன்று படங்களில் அவர் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் வந்தார். அமேசிங் ஸ்பைடர்மேன் என இரு படங்களில் நடித்தார். இவற்றுக்கு இடையில் தமிழ்ப்படம் ‘வானத்தைப் போல’ போல் எல்லா சூப்பர் ஹீரோக்களையும் ஒன்றாக்கி பூமியை காப்பாற்றுவது என தயாரிப்பு நிறுவனங்கள் முடிவெடுத்து ‘அவெஞ்சர்ஸ்’ படங்களை எடுத்தன.
அவெஞ்சர்ஸ் படங்களில் அயன் மேன் தொடங்கி, ஹல்க், கேப்டன் அமெரிக்கா, தோர் என பூமியில் சமாதானமாக உலவிக் கொண்டிருந்த சூப்பர் ஹீரோக்கள் அனைவரையும் வண்டியில் ஏற்றிச் சென்று படம் தயாரித்தது மார்வெல் நிறுவனம். பூமியின் மீதான அக்கறை ஒருபுறம் என்றாலும் ஒரு சூப்பர்ஹீரோவுக்கு பதிலாக பல சூப்பர்ஹீரோக்களை திரையில் பறக்க விட்டால் வசூல் அள்ளலாம் என கணக்குப் போட்டது தயாரிப்பு நிறுவனம். கணக்கு வீண் போகவில்லை.
கமல் படத்துக்கு பல புத்தகங்களைப் படித்து விட்டுப் போக வேண்டுமென கமல் ரசிகர்கள் நிர்பந்திப்பது போல், சூப்பர்ஹீரோ யுனிவர்ஸ்ஸை புரிந்துகொள்ள அவர்களின் கதைகளை அறிந்துகொண்டு படம் பார்க்கச் செல்ல வேண்டும் என நிர்பந்திப்பார்கள் சூப்பர்ஹீரோ ரசிகர்கள். கவலை வேண்டாம். எல்லாம் ஒரே மாவுதான். எனவே எந்தக் குழப்பமும் ஏற்படாது.
அவெஞ்சர்ஸ் படத்தில் ஸ்பைடர்மேனாக நடித்தவர்தான் டாம் ஹாலண்ட். அவர் இந்தப் படத்தில் ஸ்பைடர்மேனாக வருகிறார். ஆனால் இது வேறு உலகம். நாம்தான் மல்டிவெர்ஸ்ஸில் இருக்கிறோமே?
பூமியைக் கொண்ட சூரியக் குடும்பங்கள் பலவற்றைக் கொண்ட இந்த பெரும் அண்டம் மொத்தத்தையும் யுனிவெர்ஸ் என்பார்கள். அறிவியலில் உள்ள ஒரு சுவாரஸ்யமான கருதுகோள் என்னவென்றால் நாமிருக்கும் யுனிவெர்ஸ் போல எண்ணிலடங்கா பல யுனிவெர்ஸ்கள் இருப்பதற்கான சாத்தியமும் உண்டு என்பதுதான். எண்ணற்ற யுனிவெர்ஸ்கள் சாத்தியம் என்றால், இந்த யுனிவெர்ஸ்ஸில் நாமிருப்பதுபோல், எண்ணற்ற அந்த யுனிவெர்ஸ்களிலும் நாம் இருப்போமா என்கிற கேள்வி எழுகிறதல்லவா?
அந்தக் கேள்வியை வைத்துதான் சமீபகாலத்தில் காசு பண்ண ஆரம்பித்திருக்கிறது ஹாலிவுட். ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் அதற்கான ஒரு சாட்சி.
ஊரறிந்த ஸ்பைடர் மேனாக வாழும் டாம் ஹாலண்டுக்கு நிம்மதியான வாழ்க்கை வாழ முடியவில்லை. ஒழுங்காய்ப் படிக்க முடியவில்லை. அவருடைய ஸ்பைடர் மேன் வாழ்க்கையிலேயே அவர் நிம்மதியாக இருந்தது ஒரு வாரம் மட்டும்தான். அந்த வாரத்தில்தான் அவர் காதலில் விழுந்தார். அதற்குப் பிறகு பற்பலப் பிரச்சினைகளை இந்தப் பொல்லாத சமூகம் அவர் தீர்ப்பதற்காகாக் கொடுத்துக் கொண்டே இருக்க, ‘என்ன செய்வது’ என காதலியுடன் ஆலோசிக்கிறார். பிறகு ஊரைவிட்டு வேறூர் சென்று ஒரு பொறுப்பான ஸ்பைடர் மேனாக கல்லூரியில் படித்து பட்டம் பெறுவது என முடிவெடுக்கிறார். விண்ணப்பிக்கிறார். ஆனால் ஸ்பைடர் மேனின் வலை ஒரு ஊரை மட்டும் சேர்ந்ததாக இருக்காதல்லவா? அவர் விண்ணப்பிக்கும் நிறுவனத்துக்கும் அவரைப் பற்றி தெரிந்திருக்கிறது. விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. இத்தனை அப்பாவியான ஸ்பைடர் மேனுக்கு மனதைப் பிழியும் ஒரு கவலை சேர்கிறது. அவரின் விண்ணப்பம் மட்டும் நிராகரிக்கப்படாமல், காதலி மற்றும் நண்பனின் விண்ணப்பங்களும் அவருடன் தொடர்பில் இருந்த காரணத்தாலேயே நிராகரிக்கப்படுகின்றன. மனமுடைந்து போய்விடுகிறார் ஸ்பைடர் மேன். அந்த உலகத்துக்கு ஸ்பைடர் மேன் யாரென்பதே தெரியாமல் இருந்தால் நன்றாக இருக்குமென நம்மைப் போலவே நினைக்கிறார். எனவே டாக்டர் ஸ்ட்ரேஞ்சை நாடுகிறார்.
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் யாரென்றால் சூனியம் வைத்து பல அண்டங்களை (யுனிவெர்ஸ்கள்) இணைக்கும் வல்லமை பெற்றவர். ஸ்பைடர் மேனின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் சூனியம் வைக்கத் தொடங்கும்போது ஸ்பைடர் மேன், சிலருக்கு மட்டும் அவர் யாரென தெரிந்திருக்க வேண்டுமென குழப்பிவிட, சூனியம் எசகுபிசகாகி விடுகிறது. பிறகு நாம் எசகுபிசகாகி விடுகிறோம்.
இதுவரை வந்த ஸ்பைடர் மேன் படங்களில் வந்த வில்லன் பாத்திரங்கள் எல்லாமும் இந்தப் புது ஸ்பைடர் மேனின் உலகுக்குள் வந்து விடுகின்றனர். அவர்களைத் திரும்ப அனுப்ப வேண்டுமென டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் சொன்னதும் அதை ஏற்க மறுக்கிறார் காந்தியவாதியான ஸ்பைடர் மேன். அவரவர் உலகங்களுக்கு வில்லன்கள் சென்றுவிட்டால் அவர்கள் இறந்து விடுவார்கள் என்பதால், இங்கேயே வைத்து அவர்களை ‘சத்தியசோதனை’ படித்து திருத்துவதென முடிவெடுக்கிறார். ஒருவர் மட்டும் திருந்துகிறார். அவர் தயாரிப்பாளராக இருந்திருக்கலாம். ஆனால் இல்லை.
வில்லன்கள் அனைவரும் சேர்ந்து சுற்றுப்போட, தயாரிப்பாளரின் ஒப்பந்தத்தின்படி இரு உலகங்களிலிருந்து இரு ஸ்பைடர் மேன்கள் வருகின்றனர். டோபி மெக்வொயர் மற்றும் ஆண்ட்ரூ கார்ஃபீல்டு. மூவருமாகச் சேர்ந்து வில்லன்களை திருத்தப் போராடுகின்றனர். உலகையே அழிக்கும் வல்லமை படைத்த வில்லன்கள் என்பதால் அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலையின் தொப்பி மேல் நின்று ‘பஞ்ச்’ டயலாக்குகள் பேசுகின்றனர். ‘இரண்டாம் வாய்ப்பு வழங்கும் உன்னத நாடு அமெரிக்கா’ எனப் பேசி சிரிக்க வைக்கின்றனர். இறுதியில் ஒரு வில்லனைக் கொன்று பிற வில்லன்களைத் திருத்தி, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் வந்து, மீண்டும் சூனியம் வைத்து, அனைவரும் ஸ்பைடர் மேன் மறந்து போக வைத்து, அவன் காதலித்த காதலிக்கும் ஸ்பைடர் மேன் மறந்து போகும் துயரத்துடன் படம் முடிகிறது.