நம்மில் பலருக்கு நடிகர் பிரகாஷ்ராஜைச் சிறந்த குணச்சித்திர நடிகராகத் தெரியும். ஆனால் இவர் தந்தை இழந்த ஏழை மாணவியின் கல்வி மேற்படிப்பிற்கு உதவியுள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
அதுவும் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரத்தில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் படிக்க உதவியுள்ளார். அந்த மாணவி தற்போது பட்டம் பெற்றுள்ளார். மேலும் அந்த மாணவிக்கு வேலை கிடைக்கும் வரை நிதிஉதவி செய்யவும் நடிகர் பிரகாஷ்ராஜ் முன்வந்துள்ளார்.
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீசந்தனா என்ற மாணவியின் கல்வி மேற்படிப்பிற்குத்தான் நடிகர் பிரகாஷ்ராஜ் உதவியுள்ளார். இவர் 10,12ம் வகுப்பில் 90% மதிப்பெண்களைப் பெற்று ஆதிகவி நன்னயா பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பில் சேர்த்து அதிலும் 88% மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற்றார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பே தந்தை இறந்தாலும் படிப்பில் கவனத்துடன் இருந்ததால் இவருக்கு இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள சால்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், நிதி பிரச்சனையால் மாணவியால் மேற்படிப்பு செல்வதில் பிரச்சனை இருந்துள்ளது. இதை அறிந்த நடிகர் பிரகாஷ்ராஜ் மாணவியின் மேற்படிப்பிற்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
தற்போது ஸ்ரீசந்தனா சால்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும் அங்கே வேலை தேடவும் நிதி உதவி செய்துள்ளார். இத்தகவலை மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து சத்தமே இல்லாமல் உதவி செய்துள்ள பிரகாஷ் ராஜிக்கு பலரும் நன்றி தெரிவித்துப் பாராட்டி வருகின்றனர்.