வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன் என பலர் நடித்துள்ளனர்.
மேலும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதையடுத்து பல சர்ச்சைகளைக் கடந்து அறிவிக்கப்பட்ட தேதியில் 'மாநாடு' படம் வெளியாகி பாராட்டைப் பெற்று வருகிறது. சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் நடிப்பை அவரது பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும், கொரோனாவால் துவண்டுகிடந்த சினிமா ரசிகர்களுக்கு மாநாடு படம் பெரிய விருந்தாக அமைந்துள்ளது. படம் பார்த்த எல்லோரும் மாநாட்டு படக்குழுவை வாழ்த்தி வருகிறார்கள். இதனால் சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில், HIV நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் மாநாடு படத்தைத் திரையரங்கில் கண்டுகளிக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்திருந்தார்.
இதையடுத்து மாநாடு திரைப்படத்தைக் குழந்தைகள் திரையரங்கில் உற்சாகமாகக் கண்டுகளித்தனர். இவர்களுடன் சேர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், வருவாய்க் கோட்டாட்சியர் ரமேஷ் ஆகியோரும் மாநாடு திரைப்படத்தைப் பார்த்தனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து, மாவட்ட ஆட்சியரின் இந்த முயற்சிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.