சினிமா

தயாரிப்பாளர்.. நடிகர்.. தமிழ் சினிமாவில் அழுத்தமான இடம் பிடித்த ‘மக்கள் அன்பன்’ உதயநிதி ஸ்டாலின்!

ஆர்ப்பாட்டமில்லாத, ஹீரோயிசம் குறைந்த நம் பக்கத்து வீட்டு இளைஞராகவேதான் இவர் சினிமாவிற்கு வந்தார், இன்றும் அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறார்.

தயாரிப்பாளர்.. நடிகர்.. தமிழ் சினிமாவில் அழுத்தமான இடம் பிடித்த ‘மக்கள் அன்பன்’ உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்கள் அன்பன் உதயநிதி..!

ஒரு படத்திற்கான முதல் அறிமுகமாக ஆண்டாண்டு காலாங்களாக இருந்து வருவது நடிகர்களும் இயக்குநர்களும்தான். புரட்சித் தலைவர், புரட்சிக் கலைஞர், நடிகர் திலகம், நடிகையர் திலகம் என அடையாளப்படுத்தப்பட்ட படங்கள் பின்னர் இயக்குநர் சிகரம், இயக்குநர் இமயம், மெல்லிசை மன்னன், இசைஞானி, தேனிசைத் தென்றல், இசைப்புயல் என சில இயக்குநர்கள் மற்றும் இசையமைப்பாளர்களாலும் அடையாளப்படுத்தப்பட்டன. ஆனால் தமிழ் சினிமாவில் இதுநாள் வரையில் எந்த ஒரு எழுத்தாளரும் ‘கலைஞரின் கைவண்ணம்’ என்பதுபோல் அங்கீகாரத்தை பெற்று ஒரு படத்திற்கு அடையாளமானது இல்லை என்பதே உண்மை. கலைஞரின் வசன வீச்சுகள் தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை ஏறபடுத்தியது. அப்படியான சினிமா பின்புலத்தில் இருந்து கோலிவுட்டிற்கு வந்தவர் தான் உதயநிதி ஸ்டாலின்.

ஆனால், அவர் மீதான சினிமா வெளிச்சமும் ரசிகர்களின் ஆதரவும் நிலைத்து நிற்க கடுமையாக உழைத்துள்ளார். ஆர்ப்பாட்டமில்லாத, ஹீரோயிசம் குறைந்த நம் பக்கத்து வீட்டு இளைஞராகவேதான் இவர் சினிமாவிற்கு வந்தார், இன்றும் அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறார். இவர் படங்களிலும் சரி படத்திற்கு வெளியேயும் சரி என்றும் அமைதியான யதார்த்த மனிதர் தான். தன் 44வது பிறந்தநாளை மக்கள் பணியோடு கொண்டாடும் நம் ‘மக்கள் அன்பன்’ உதயநிதியின் சினிமா பாதையை விளக்குவதே இந்தக் கட்டுரை.

2008ஆம் ஆண்டு விஜய் நடித்து வெளியான ‘குருவி’ படத்தின் மூலம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானது. முதல் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் திரையில் முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் எனும் பெயர் தோன்றியபோது எழுந்த ரசிகர்களின் ஆரவாரம் இன்றும் நினைவிருக்கிறது. அந்த உற்சாகத்தை மனதில் கொண்டு அடுத்த ஆண்டு சூர்யா நடிப்பில் கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ‘ஆதவன்’ படத்தைத் தயாரித்தார். கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் படம் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட்டடித்தது. கே.எஸ்.ரவிகுமாரின் படங்கள் என்றாலே அதில் அவருக்கும் ஒரு கேரக்டர் ஒதுக்கப்பட்டிருக்கும் அப்படி இல்லை என்றால் படத்தின் இறுதியில் நன்றி சொல்ல அவர் ஒரு காட்சியில் நிச்சயம் வந்துவிடுவார், ஆதவன் படத்திலும் அது நடந்தது. ஆனால் கூடவே உதயநிதி ஸ்டாலினும் வந்தார். ரசிகர்களுக்கும் பெரும் ஆச்சர்யமாக அமைந்த அந்தக் காட்சியில் சிங்கத்தின் உறுமலோடு திரையில் எண்ட்ரியானார் உதயநிதி. அதுவரையில் என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார் என முடியும் அவர் திரைப்படங்களின் எண்ட்கார்டில் முதல் முறையாக தயாரிப்பாளரான உதயநிதியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

தயாரிப்பாளர்.. நடிகர்.. தமிழ் சினிமாவில் அழுத்தமான இடம் பிடித்த ‘மக்கள் அன்பன்’ உதயநிதி ஸ்டாலின்!

2010ல் ஒரு தயாரிப்பாளர் என்பதை தாண்டி விநியோகிஸ்தர் எனும் அங்கீகாரத்தையும் பெற்றது ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம். 2010ஆம் ஆண்டு கமலின் ‘மன்மதன் அம்பு’ படத்தை தயாரித்திருந்த உதயநிதி அவர்கள் சிம்புவின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ஆர்யாவின் ‘மதராசப்பட்டினம்’ மற்றும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘மைனா’ ஆகிய படங்களை விநியோகம் செய்து கோலிவுட்டில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்புகளை உண்டாக்கிருந்தார்.

ஒரே ஆண்டில் நான்கு சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்ததன் மூலம் 2010ல் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றங்களை கொடுக்கப்போகும் தயாரிப்பு நிறுவனமாக உருவாகும் என அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்தனர். அடுத்து 2011ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் ரெட் ஜய்ண்ட் தயாரிப்பில் வெளியானது ‘7ஆம் அறிவு’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழர்கள் மறந்த போதிதர்மரையும் மார்ஷியல் ஆர்ட் கலைகளையும் மீண்டும் நினைவுபடுத்தியது 7ஆம் அறிவு. மன்மதன் அம்பு, 7ஆம் அறிவு என தொடர்ந்து எக்ஸ்ப்ரிமெண்டல் படங்களை தயாரித்து தனக்கு கதை மீதும் திரைக்கதைகளின் மீதும் இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்திய உதயநிதி அதன்பின் நடிக்கவும் துவங்கிவிட்டார்.

2012ஆம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சரவணனாக திரையில் தோன்றினார். குடும்பங்கள் கொண்டாடும் நகைச்சுவைப் படமாக உருவாகியிருந்த இந்தப் படம் 175 நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்திருந்தது. கோலிவுட் ரசிகர்கள் தன்னை ஒரு நடிகனாக ஏற்பார்களா எனும் பெரும் கேள்வியோடு தனது முதல் படத்தை துவங்கிய உதயநிதிக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவை அளித்து படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் 3 மடங்கு லாபம் பார்க்கச் செய்தனர். இவர் தயாரித்த படங்களிலேயே அதிக லாபத்தை ஈட்டிய படமும் இதுதான். உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்த இந்தப் படத்தில் நண்பனாக சந்தானம் நடித்திருப்பார். முதல் படத்திலேயே உதயநிதி - சந்தானம் காம்போ ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றது. அதுமட்டுமின்றி சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம்ஃபேர், நார்வே தமிழ் ஃபிலிம் ஃபெஸ்டிவல், சைமா அவார்ட் ஆகிய விருதுகளையும் பெற்றிருந்தார்.

தயாரிப்பாளர்.. நடிகர்.. தமிழ் சினிமாவில் அழுத்தமான இடம் பிடித்த ‘மக்கள் அன்பன்’ உதயநிதி ஸ்டாலின்!

முதல் படத்தின் வெற்றி இவரை அடுத்தடுத்து படங்களில் நடிக்கத் தூண்டியது. இருப்பினும் ஆண்டுக்கு ஒரு படம் என நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். ‘இது கதிர்வேலன் காதல்’, ‘நண்பேண்டா’ என அடுத்தடுத்து சந்தானத்தோடு சேர்ந்து காமெடி படங்களாக நடித்த இவர் மீது சந்தானம் இல்லாமல் காமெடி ஜானர் இல்லாமல் ஒரு படம் பண்ண முடியாதா எனும் கேள்வி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டே அந்த கேள்விகளுக்கு ஒன்றல்ல இரண்டு படங்கள் மூலம் பதிலளித்தார்.

2016ஆம் ஆண்டு ஒரு நடிகனாக உதயநிதிக்கு மிகமுக்கியமான ஆண்டு என்றே சொல்ல வேண்டும். அதுவரையில் கமர்ஷியல் படங்களில் காமெடியனோடு சேர்ந்து அரட்டையடித்துச் செல்லும் ஹீரோவாக வந்து சென்ற உதயநிதி ‘கெத்து’ படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் காட்டிருந்தார். இதில் இவருக்கு வில்லனாக விக்ராந்த் நடித்திருந்தார். கெத்து படத்தின் ட்ரைலர் விக்ராந்த், உதயநிதி என இருவர் மீதும் கவனத்தை திருப்பியது. இதுவரை உதயநிதியை இப்படி ஒரு லுக்கில் மாஸ் ஆக்‌ஷன் ஹீரோவாக பார்த்திராத கோலிவுட் ரசிகர்களுக்கு கெத்தாக ஷோ காட்டியிருந்தார்.

அதே ஆண்டில் அஹமத் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு டெல்லியின் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 2013ல் வெளியாகிருந்த பாலிவுட் படமான ‘ஜாலி எல்.எல்.பி’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிருந்த ‘மனிதன்’ படத்தில் நடித்து கோலிவுட் பிரபலங்களிடத்திலும் ரசிகர்களிடத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திருந்தார். வக்கீல் சக்திவேலாகவே உதயநிதி மனிதன் படத்தில் வாழ்ந்திருந்தார். காதல், எமோஷன், நீதிமன்றத்தில் வழக்காடும் காட்சிகள் என படம் முழுக்க மென்மையான ஹீரோயிசம் காட்டிருப்பார். இந்தப் படத்தில்தான் அவருக்குள் இருக்கும் சமூக உணர்வுகளும் இந்த சமூகத்தின் மீதான அவரின் பார்வையும் வெளிப்பட்டிருந்தது. 2016ஆம் ஆண்டுக்கு முன்னதாக நாம் பார்த்த உதயநிதிக்கும் அதற்கு பின்னான உதயநிதியின் சினிமா பாதையும் முற்றிலும் மாறுபட்டது.

தயாரிப்பாளர்.. நடிகர்.. தமிழ் சினிமாவில் அழுத்தமான இடம் பிடித்த ‘மக்கள் அன்பன்’ உதயநிதி ஸ்டாலின்!

சினிமாவை கொஞ்சம் கொஞ்சமாக படிக்க துவங்கிய இவர் படத்திற்கு படம் தன்னை சினிமாவிற்காக மெருகேற்றினார். முதலில் நடிப்பு, அடுத்து ஆக்‌ஷன் காட்சிகள் பின்னர் நடனம் என படியாக தன்னை முழு நடிகனாக மாற்றிக்கொண்டார். இடையில் சரவணன் இருக்க பயமேன், பொதுவாக என் மனசு தங்கம், இப்படை வெல்லும் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் மீண்டும் தனது எதார்த்த நடிப்பை ‘நிமிர்’ படத்தின் மூலம் வெளிப்படுத்தினார். தனது சொந்த தயாரிப்பிலே நடித்துவந்த உதயநிதி முதல் முறையாக பொதுவாக என்மனசு தங்கம் படத்தில் தான் வேறொரு தயாரிப்பில் படம் நடித்திருந்தார். தேனாண்டாள், லைகா என முன்னணி நிறுவனங்களின் படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் கைக்கொடுக்கவில்லை. வெளி தயாரிப்பில் அவர் நடித்ததில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான நிமிர் படம் மட்டுமே ரசிகர்களை கவர்ந்திருந்தது. நிமிர் படத்தில் இயக்குநர் மகேந்திரனின் மகனாக புகைப்படக் கலைஞனாக வரும் உதயநிதி போட்டோகிராஃபி என்றால் என்ன என்பதை உணரும் தருணங்களிலும், பலர் முன் அவமானப்படும்போது காட்டும் முகபாவனை என படமுழுக்க நெருடல் இல்லாத நடிப்பை வெளிக்காட்டிருப்பார். நிமிர் திரைப்படம் கற்றுக்கொடுத்த பாடத்தில் இருந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்யத் துவங்கி அந்த பாதையிலே இன்றும் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே தான் சீனு ராமசாமி - உதயநிதி இடையேயான நட்பும் துளிர்ந்தது. கிராமங்கள் சார்ந்த எதார்த்த கதைகளை கொடுக்கும் இயக்குநர்களில் முக்கியமானவரான சீனு ராமசாமி தமிழ் சினிமாவிற்கு கொடுத்த செல்வங்களில் ஒன்றுதான் மக்கள் செல்வன். அதுபோன்று நம் உதயநிதிக்கு இவர் கொடுக்க விரும்பிய பட்டம்தான் ‘மக்கள் அன்பன்’. இவர்கள் கூட்டணியில் உருவான ‘கண்ணே கலைமானே’ படத்தின் டைட்டில் கார்டில் மக்கள் அன்பன் உதயநிதி என நேம் கார்ட் போட விரும்புவதாக உதயநிதியிடம் கூறியபோது அதை வேண்டாம் என மறுத்துவிட்ட உதயநிதி இன்று சினிமா அரசியல் என இரு களங்களிலும் மக்கள் அன்பனாகவே வலம்வந்து கொண்டிருக்கிறார். பெயருக்கான பட்டங்கள் கேட்டுப்பெறுவதில்லை தானாக அமைவதாக இருக்க வேண்டும் என்பார்கள் அது உதயநிதிக்கு அமைந்துவிட்டது. ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்த இந்த படமும் ‘நிமிர்’ படத்தைப் போலவே ஃபாரின் பாடல், பறக்கும் சண்டைக் காட்சிகள் என ஏதுமற்ற யதார்த்தமான கதாபாத்திரம். மிகவும் இயல்பாக நடித்திருப்பார். அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சைக்கோ’ படத்தில் யதார்த்த நடிப்பின் உச்சம் தொட முயன்றிருந்தார் உதயநிதி. கண் பார்வை இல்லாத போதும் சைக்கோ கொலைகாரனிடமிருந்து தனது காதலியை காப்பாற்றப் போராடும் ஒவ்வொரு காட்சிகளிலும் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் பதைபதைப்பை உண்டாக்கிவிட்டார். அதுவே அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அந்த கண்பார்வையில்லாத இசைக்கலைஞன் கௌதம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்க முடியாமல் இருக்கிறார் என்றால் அந்த கேரக்டரில் அவர் கொடுத்த தாக்கம் எத்தகையது என்பதை நாம் உணர வேண்டும். தற்போது இவர் நடிப்பில் ‘கண்ணை நம்பாதே’, ‘ஏஞ்சல்’, ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகிய படங்கள் உருவாகிவருகிறது. இதில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உருவாகிவரும் ‘நெஞ்சுக்கு நீதி’ மிக முக்கியமான படமாக அவருக்கு அமையும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தயாரிப்பாளர்.. நடிகர்.. தமிழ் சினிமாவில் அழுத்தமான இடம் பிடித்த ‘மக்கள் அன்பன்’ உதயநிதி ஸ்டாலின்!

பாலிவுட்டில் ஆயூஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி இந்திய அளவில் கவனமீர்த்த ‘ஆர்டிகள் 15’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த நெஞ்சுக்கு நீதி. ஜீ ஸ்டூடியோஸ் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்று போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. சில உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்த இந்த படத்தின் கதைக்களம் ரசிகர்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கம் நெஞ்சுக்கு நீதி படத்தின் வெற்றியை முதல் அறிவிப்பிலே உறுதிப்படுத்திவிட்டது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட இந்த படத்தின் மோஷன் போஸ்டர் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

தயாரிப்பாளர்.. நடிகர்.. தமிழ் சினிமாவில் அழுத்தமான இடம் பிடித்த ‘மக்கள் அன்பன்’ உதயநிதி ஸ்டாலின்!

தற்போது க்ரைம் கதைகளுக்கு புகழ்பெற்ற இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து வெளியாக இருக்கும் இந்தப் படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு நடிகனாக, தயாரிப்பாளராக, விநியோகிஸ்தராக தன் படங்களில் இவர் காட்டும் அக்கறையை மற்ற நடிகர்களின் படங்களுக்கும் காட்டி அவர்களோடு என்றும் நட்பு பாராட்டிவரும் இவர், சமீபத்தில் வெளியாகாது என படத்தின் தயாரிப்பாளரே கைவிட்டுவிட்ட ‘மாநாடு’ படத்திற்கு கடைசி நேரத்தில் உதவி, ஒரு பெரும் தொகைக்கு அந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கி படத்தின் ரிலீஸுக்கு வழி செய்து கொடுத்தார். இது போன்று பல நிகழ்வுகளில் சினிமா துறையில் இருக்கும் மற்ற நடிகர்களின் பிரச்சனைக்கு தோள் கொடுத்து உதவியுள்ள இவர் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோ தான்.

banner

Related Stories

Related Stories