கொரோனா பெருந்தொற்றினால் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் 25ஆம் தேதி தான் கேரளாவில் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதனை அடுத்து சில படங்கள் நேரடியாக திரையரங்கில் வெளியாக தயாராகின.
ஒரு சில படங்கள் வெளியாகியும் போதுமான அளவிற்கு கூட்டம் சேரவில்லை. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மோகன்லால், மம்மூட்டி, ஃபகத் ஃபாசில் என பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்ட உச்ச நடிகர்களின் படத்திற்காக காத்திருந்தனர்.
இந்த நிலையில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் அலோன், 12த் மேன், ப்ரோ டாடி ஆகிய படங்களும் ஏற்கனவே ரிலீஸுக்கு தயாராக இருக்கும் மரக்காயர் படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்ததை தொடர்ந்து அதிர்ச்சியாகினர். இதனையடுத்து பட தயாரிப்பாளர்களை அழைத்து பேசினர்.
அப்போது, இந்த படங்களை தியேட்டர்களில் திரையிட்டு 21 நாட்களுக்கு பிறகு ஓடிடி-யில் வெளியிட படக்குழுவினர் அனுமதி கேட்டதாகவும், திரையரங்கு உரிமையாளர்கள் அதனை ஏற்காமல் 80 நாட்களுக்கு பிறகே ஓடிடி-க்கு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததால் தியேட்டருக்கு பதிலாக ஓடிடி-யில் வெளியிடும் முடிவை எடுத்திருப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் செய்வதரியாது இருந்த திரையரங்க உரிமையாளர்கள் நடிகர் விஜய்யின் ஹிட் படங்களை ரீ- ரிலீஸ் செய்து வருகின்றனர். அடுத்தடுத்து நான்கு வாரங்களுக்கு ஒவ்வொரு விஜய் படமாக ரீ - ரிலிஸ் செய்ய திட்டமிட்டு அதன்படி கடந்த வாரம் ‘சர்கார்’ திரையிடப்பட்டது.
தொடர்ந்து இந்த வாரம் ‘கில்லி’ படம் திரையிடப்பட்டு வருகிறது. விஜய்க்கு கேரளவிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் திரையரங்க உரிமையாளர்களின் இந்த திட்டம் வெற்றியை தேடிக் கொடுத்துள்ளது.
இடையே ரசிகர்களை கவரும் வகையில் பீஸ்ட் படத்தின் போஸ்டர் மற்றும் வீடியோக்களையும் திரையிட்டு ரசிகர்களை உற்சாகமடைய செய்து வருகின்றனர். புது படத்தின் ரிலீஸ் போலவே ரசிகர்கள் விஜய்யின் புகைப்படம் அடங்கிய கொடியோடு நீண்ட தூரம் வரிசையில் நின்று டிக்கட் வாங்கி படம் பார்த்த நிகழ்வுகளும் கேரளாவில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.