நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், யோகிபாபு ஆகியோர் நடிப்பில், இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம், எப்படி இருக்கிறது?
வழக்கமான துறுதுறு கதாபாத்திரமாக இல்லாமல், இந்த முறை வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ஆரம்பத்தில் பார்ப்பதற்கு கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக அது செட்டாகி விடுகிறது.
இந்தப் படத்தில் நடித்திருந்த நிறைய கதாபாத்திரங்கள் செய்யும் கலாட்டா, படம் மொத்தத்தையும் செம ஜாலியாக மாற்றுகிறது. குறிப்பாக, ரெடின் கிங்க்ஸ்லி படம் முழுக்கச் செய்யும் அட்டகாசம் வேற லெவல். யோகிபாபு, வழக்கமான தனது ஒன் லைனர்கள் மூலம் சிரிக்க வைக்கிறார். எதிர்பாராவிதமாக அவை அனைத்தும், இந்த முறை நன்றாகவே உள்ளன.
இந்தப் படத்தின் பெரிய ப்ளஸ்ஸே, ஒரு ஹீரோ, ஹீரோயின் காமெடியன் என்று இல்லாமல், அனைத்து கதாபாத்திரங்களையும் வைத்து, முடிந்தவரை காமெடி செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, அனிருத்தின் இசையும், விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும், படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
இந்தப் படத்தின் குறைகளாக, சில லாஜிக் மீறல்களை கூறவேண்டும். வில்லனாக நடித்துள்ள வினய் ஸ்டைலிஷாகவும், அழகாகவும் நடித்துள்ளார். ஆனால், அவரது கதாபாத்திரம், எளிதில் ஏமாந்துவிடுவது போல் காட்டியுள்ளது நம்பமுடியவில்லை. இதைக்கூட மன்னித்து விடலாம்.
ஆனால், படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்திற்கு, நைட்டி மாட்டி பூ வெச்சு, கிண்டல் செய்யும் காட்சி, அரசியல் புரிதல் இல்லாமல் எடுக்கப்பட்டதாகவே தெரிகிறது. இந்தக் குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்க்கும்போது, முழுக்க முழுக்க திரையரங்க அனுபவத்தைப் பெறவேண்டிய வெற்றிப் படமாக டாக்டர் இருக்கும்.