சினிமா

"இந்த ஒரு வார்த்தை போதாதா.. எங்க நட்புக்கு சாட்சியா..?” - எஸ்.பி.பி நினைவுநாளில் இளையராஜா உருக்கம்!

எஸ்.பி.பி உடனான நினைவுகள் குறித்து இளையராஜா உருக்கமாகப் பேசியுள்ளார்.

"இந்த ஒரு வார்த்தை போதாதா.. எங்க நட்புக்கு சாட்சியா..?” - எஸ்.பி.பி நினைவுநாளில் இளையராஜா உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மகத்தான பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி காலமானார். அவர் காலமாகி இன்றுடன் ஓராண்டாகிறது. அதையொட்டி திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் எஸ்.பி.பி முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இசைஞானி இளையராஜா கலந்துகொண்டார்.

எஸ்.பி.பி உடனான நினைவுகள் குறித்து இளையராஜா பேசுகையில், “பாலுவுக்கும் எனக்குமான நட்பு எந்த மாதிரி என்பது உலகத்துக்கே தெரிந்த விஷயம். ரொம்ப சர்வசாதாரணமாகப் பழகக்கூடிய நண்பர். அந்தக் காலத்திலேயே மேடையில் ஆர்மோனியத்துடன் உட்கார்ந்திருந்தேன் என்றால் பக்கத்தில் பாலு பாடுவார். எங்களைச் சுற்றி மற்ற அனைவரும் இருப்பார்கள்.

இசையமைப்பாளரான பின்பு கூட எங்களுடைய நட்பு தொடர்ந்தது. இருவருடைய உழைப்பினால்தான் பல பாடல்கள் உங்களை வந்து சேர்ந்துள்ளன. நீ இப்படிப் பாடு, அப்படிப் பாடு என்பது என்னுடைய கற்பனை. அது வேறு விஷயம். பாடல் பதிவின்போது அந்த நட்பு இடையில் வரவே வராது. தொழில், நட்பு இரண்டுமே வேறு.

பல மேடைகளில் என்னைப் பற்றி நிறைய புகழ்ந்து பேசியிருக்கிறார். அவர் புகழ்ந்து எனக்கென்றும் ஆகப் போவதில்லை. நான் அவரைப் பற்றிப் புகழ்ந்து, அவருக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆனால், எனக்கு அவர் மனதிற்குள் என்ன இடம் கொடுத்திருக்கிறார் என்பது முக்கியம். நான் ஆர்மோனியம் வாசிப்பவராக இருந்து, இசையமைப்பாளராக மாறி இருவரும் நிறையப் பாடல்கள் உருவாக்கினோம்.

"இந்த ஒரு வார்த்தை போதாதா.. எங்க நட்புக்கு சாட்சியா..?” - எஸ்.பி.பி நினைவுநாளில் இளையராஜா உருக்கம்!

அவர் எனக்கு மனதில் எந்த மாதிரியான இடம் கொடுத்தார் என்பதற்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். அவர் மருத்துவமனையில் அபாயகட்டத்தில் இருந்தார். பலரும் ட்விட்டரில் அவர் மீண்டு வரவேண்டும் என்று பதிவிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது என்னிடமும் நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அவன் திரும்பி வந்துவிடுவான் என்று சொன்னேன்.

பின்பு உடல்நிலை மிகவும் மோசமானவுடன், நானும் ஒரு வீடியோ பேசி வெளியிட்டேன். "பாலு.. உனக்காகக் காத்திருக்கிறேன் சீக்கிரம் வா" என்று அதில் கூறியிருந்தேன். அந்த வீடியோவை எஸ்.பி.பிக்கு நினைவு வந்தபோது எஸ்.பி.சரண் போட்டுக் காட்டியிருக்கிறான். உடனே கண் எல்லாம் கலங்கி, போனை வாங்கி எனக்கு முத்தம் கொடுத்திருக்கிறார்.

யாரையாவது பார்க்க வேண்டுமா என்று எஸ்.பி.பியிடம் கேட்டிருக்கிறார்கள். அப்போது "ராஜாவை வரச் சொல்லு" என்று சொல்லியிருக்கிறார். இந்த ஒரு வார்த்தை போதாதா. அவருடைய மனதில் எனக்கு என்ன இடம் கொடுத்திருந்தார் என்றால், என்னை மட்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கும். அந்த மாதிரியான நட்பு எங்களுடையது. என்னுடைய ஒவ்வொரு மேடையிலும் அவரும் இருக்கிறார் என்பதுதான் சத்தியம்” என உருக்கமாகப் பேசினார்.

banner

Related Stories

Related Stories