சினிமா

ஒரு மரணம் உறவுகளை என்னவாக்கும்? - காணேக்காணே என்கிற மலையாளப் படம் இயங்கும் களம் இதுதான்!

எல்லாமே சரியாக இருந்தாலும் ஏதோவொன்று சரியாக இல்லாமலே இருக்கிறது. இழந்த உறவு அலைக்கழிக்கும் மனதை காட்சிப்படுத்துகிறார் இயக்குநர்.

ஒரு மரணம் உறவுகளை என்னவாக்கும்? - காணேக்காணே என்கிற மலையாளப் படம் இயங்கும் களம் இதுதான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

துணை தாசில்தாரான பால் மத்தாய்க்கு ஒரு பிரச்சினை. அவரின் மகள் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். ஒரு கார் இடித்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மகள் சாலையோரத்தில் விழுந்து உயிரிழந்துவிட்டார். ஒரு வருடம் ஆகிவிட்டது.

பிரச்சினை என்னவென்றால் மகளுக்கு ஒரு மகன் இருக்கிறான். மருமகன் மகனை வளர்க்கிறான். மருமகன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டான். மருமகனின் புது மனைவி கர்ப்பமுற்றிருக்கிறாள்.

மகளை இழந்த கோபம் அவருக்கு தணியவில்லை. எனவே மகளை இடித்த கார்காரர் மீது வழக்கு தொடுத்து வழக்கு நிலுவையில் இருக்கிறது. மகளுடன் இருக்கும் ஒரே இறுதி தொடர்பாக அவளின் மகன் மட்டும்தான் இருக்கிறான் பால் மத்தாய்க்கு. ஆனால் அவனை பார்க்கக் கூட ஓர் அந்நியமான குடும்பத்துக்குள் வர வேண்டிய சூழல் அவருக்கு.

படம் தொடங்குகிறது. மருமகனின் வீட்டுக்கு பேரனை காண வருகிறார் பால் மத்தாய். வீட்டில் மருமகனின் புது மனைவியும் பேரனும் இருக்கின்றனர். பேரனை மகளின் இடத்தில் இருந்து மருமகனின் புது மனைவி பார்த்துக் கொள்கிறாள். நன்றாகவே பார்த்துக் கொள்கிறாள். எனினும் பால் மத்தாய்க்கு அந்த யதார்த்தம் கசப்பாகவே இருக்கிறது.

பால் மத்தாய் வீட்டுக்கு வந்திருப்பதை கணவனிடம் தெரிவிக்கிறாள் புது மனைவி. வீட்டுக்குள் கிளம்பும் அவன் காருக்குள் வைத்திருக்கும் மதுவை குடித்து தனக்குள் எரியும் ஏதோவொன்றை தணிக்க முயலுகிறான்.

வீட்டுக்கு வரும் மருமகனுக்கும் பால் மத்தாய்க்கும் கூட எந்த உரசலும் இல்லை. மருமகனின் புதுமனைவியிடமும் பால் மத்தாய் வெறுப்பு காட்டவில்லை. எல்லாமே சரியாக இருந்தாலும் ஏதோவொன்று சரியாக இல்லாமலே இருக்கிறது. இழந்த உறவு அலைக்கழிக்கும் மனதை காட்சிப்படுத்துகிறார் இயக்குநர்.

ஒரு முக்கியமான பிளாஷ்பேக் காட்சி வருகிறது. மகள் இறப்பதற்கு முன் வந்த புத்தாண்டின்போது மருமகன் வீட்டில் இல்லை. வேலை விஷயமாக அவசரமாக மும்பைக்கு செல்கிறான். அங்கிருந்து வீடியோ அழைப்பில் மனைவியை தொடர்பு கொண்டு மன்னிப்பு கோருகிறான். செல்ஃபோனின் வழியாகவே புத்தாண்டு வாழ்த்துகளை இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர்.

பேரனை பார்க்க வீட்டுக்கு வந்த பால் மத்தாய் கிளம்புகிறார். அப்போது ஒரு விஷயம் அவரது கவனத்தை ஈர்க்கிறது. வீட்டின் சுவரில் புது மனைவியுடன் மருமகன் இருக்கும் புகைப்படங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றில் இருவரும் அருகருகே இருக்கே, தலைக்கு பின்னே இரவுவானில் வெடிக்கும் வாண வேடிக்கையின் சிதறல்கள். புத்தாண்டு!

பால் மத்தாய்க்கு பொறி தட்டுகிறது. மகள் இறப்பதற்கு முன்னமே மருமகன் அப்பெண்ணுடன் உறவில் இருந்ததை புரிந்து கொள்கிறார். அப்படியெனில் மகளின் மரணம் வெறும் விபத்துதானா? அல்லது கொலையா?

சடசடவென வீழும் உறவுகளின் கோலங்களை படத்தில் பார்க்கவும். படம் வெறும் இரண்டு மணி நேரம்தான். Sony Liv ஓடிடி தளத்தில் இருக்கிறது. காதல், அன்பு, தாய்மை, குற்றம், கையறுநிலை, தண்டனை, மன்னிப்பு என பல தளங்களில் விறுவிறுப்பாக கதை பயணிக்கிறது.

சூரஜ், டொவினோ தாமஸ், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படத்தை மனு அசோகன் இயக்கியிருக்கிறார். சமூகத்தின் உறவுகள் நம்மை விரட்டும் இருட்டு மூலைகளை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

banner

Related Stories

Related Stories