தொழிலதிபர்களை விடவும் வெளிநாடுகளுக்கு அதிகமாக பயணம் செய்து அங்கு வசிப்பது விளையாட்டு வீரர்களும் திரைப்பிரபலங்களும் தான். அது போன்று வெளிநாடுகளில் சென்று வசிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல; அதற்கும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். அந்த கட்டுபாடுகளுக்கு உள்ளே அவர்கள் அங்கு வசிக்கமுடியும்.
இப்படியான சூழலை எளிமையாக்க கடந்த 2019ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் புதிய விசா வழங்கும் முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும். ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு, தற்போது பிரபல மலையாள நடிகர்களான பிருத்விராஜ், துல்கர் சல்மான் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
கோல்டன் விசா பெற்றது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நடிகர் துல்கர் சல்மான், திரைப்படம் மற்றும் தயாரிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காகவும், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் புதிய திறமைகளை ஊக்குவிப்பதற்காகவும் அபுதாபி அரசின் அனைத்து எதிர்காலத் திட்டங்களையும் கேட்க அருமையாக இருந்தது. அபுதாபி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தயாரிப்புகள், படப்பிடிப்பு மற்றும் அதிக நேரம் செலவழிக்க காத்திருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.