சினிமா

“மக்களை சிரிக்க வச்சிட்டு இந்த உசுரு போகணும்”: 10 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் வடிவேலு உருக்கம்!

“மக்களை சந்தோஷப்படுத்திவிட்டுத்தான் இந்த உயிர் போகவேண்டும். இதுதான் என்னுடைய லட்சியம்.” என நடிகர் வடிவேலு உருக்கமாகப் பேசியுள்ளார்.

“மக்களை சிரிக்க வச்சிட்டு இந்த உசுரு போகணும்”: 10 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் வடிவேலு உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடந்த பத்தாண்டுகளாக மிகச் சொற்ப படங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகர் வடிவேலு, மீண்டும் முழுவீச்சில் படங்களில் நடிக்கவிருக்கிறார்.

ஷங்கர் தயாரிப்பில் 24ஆம் புலிகேசி படத்தில் நடிப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டிருந்த நிலையில், தற்போது அந்த பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டதால் அடுத்த அத்தியாயத்திற்கு தயாராகியுள்ளார் வடிவேலு.

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் வடிவேலு. இப்படக் குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய நடிகர் வடிவேலு, “முதலில் மீம் கிரியேட்டர்களாகிய என் அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. எனக்கு ஏற்பட்ட துன்பங்களை வேறு யாரும் அனுபவிக்கமுடியாது. என் வாழ்க்கையில் பெரிய சூறாவளி அடித்தது.

கொரோனா வந்தபிறகு என் பிரச்னை சாதாரணமாக மாறிவிட்டது. கொரோனா காலகட்டத்தில் எனது காமெடியை பார்த்து மக்கள் மகிழ்ச்சியடைந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்.

முதலமைச்சரை சந்தித்துவிட்டு வந்தபின் எனக்கு எல்லாம் நல்லதாகவே நடைபெறுகிறது. இன்றிலிருந்து என்னுடைய பயணம் நகைச்சுவைப் பயணமாக இருக்கும். மக்களை சந்தோஷப்படுத்திவிட்டுத்தான் இந்த உயிர் போகவேண்டும். இதுதான் என்னுடைய லட்சியம்.

நண்பன் விவேக்கின் மறைவு நாட்டுக்கும் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பு. அந்த இடத்தையும் சேர்த்து நிரப்பவேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. இனிவரும் காலங்களில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்திலோ தயாரிப்பிலோ நடிக்கமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories