மிஷன் இம்பாசிபிள் படத்தின் மூலம் உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகர் டாம் க்ரூஸ். இவரது அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இவர் நடிகராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் ஹாலிவுட்டில் வலம் வருகிறார். இந்நிலையில் இவர் நடித்து வரும் 'மிஷன் இம்பாசிபிள் 7' படத்தின் படப்பிடிப்பு பிரிட்டனில் நடந்து வருகிறது.
இந்தப் படப்பிடிப்பிற்காக டாம் க்ரூஸ் தனது விலை உயர்ந்த BMW X 7 காரில் வந்துள்ளார். இந்த காரை படப்பிடிப்பு நடக்கும் நட்சத்திர விடுதிக்கு வெளியே நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் திடீரென நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் கார் இல்லாததைப் பார்த்து பாதுகாவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த தகவலை கேட்டு நடிகர் டாம் க்ரூஸ் அதிருப்தியடைந்துள்ளார். மேலும் காரோடு சேர்ந்து லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களும் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து போலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. BMW X 7 மின்னணு கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட கார் என்பதால் போலிஸார் கார் எங்கிருக்கிறது என்பதை விரைந்து கண்டுபிடித்து மீட்டனர்.
இருந்தபோதும், காரில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் திருடுபோயிருந்தன. நடிகர் டாம் க்ரூஸ் காரை யார் திருடிச் சென்றார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகர் டாம் க்ரூஸின் கார் திருடப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அவரின் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.