டைகர் 3 படத்தின் ஷூட்டிங்கிற்காக ரஷ்யா செல்ல அண்மையில் மும்பை விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார் பாலிவுட்டின் உச்சபட்ச நடிகர் சல்மான் கான். அவருடன் நடிகை கத்ரினா கைஃப்-ம் வந்திருந்தார்.
அப்போது, விமான நிலையத்தில் சோதனைக்கு நிற்காமல் சல்மான் கான் சென்றதை கவனித்த சி.ஐ.எஸ்.எஃப் காவலர் ஒருவர் அவரை தடுத்தி நிறுத்தி சோதனையிட்ட பிறகே உள்ளே நுழைய அனுமதித்தார்.
இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. மேலும் பிரபலம் என்பதற்காக விட்டுவிடாமல் நேர்மையாக தன்னுடைய பணியை செய்த சோம்நாத் மொஹந்தி என்ற அந்த காவலருக்கு நெட்டிசன்கள் வாழ்த்து மழையைப் பொழிந்தனர்.
இதனையடுத்து, இந்த நிகழ்வு தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்ததால் சோம்நாத் ஏ.எஸ்.ஐ.-யின் செல்போனை சி.ஐ.எஸ்.எஃப் கைப்பற்றி அவர் மீது நடவடிக்கை மேற்கொண்டதாகவும், இனி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் பேசுபொருளானது மத்திய தொழிற்சாலை காவல் படைக்கு கடுமையான கண்டனங்களும் நெட்டிசன்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், சோம்நாத் மீது நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. அதற்கு மாறாக, அனைத்து காவலர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கும் சோம்நாத் மொஹந்தியை பாராட்டுவதாகவும் சி.ஐ.எஸ்.எஃப் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.