திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் ஆர்யாவுக்கு எதிராக ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண் தரப்பில் சி.பி.சி.ஐ.டி.,யிடம் புகார் அளிக்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய சி.பி.சி.ஐ.டி.,க்கு உத்தரவிடக்கோரி விட்ஜா சார்பில் அவரது பொது அதிகாரம் பெற்ற ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த நடிகர் ஆர்யா தன்னிடம் 70 லட்சத்திற்கு ரூபாய் மேல் பணம் பெற்றுக்கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பணத்தை திரும்ப கேட்ட போது, தன்னுடைய வீட்டுக்கடன் அனைத்தையும் செலுத்தி விடுவதாக மணப்பெண்னும் நடிகையுமான சாயிஷா பெற்றோர் உறுதியளித்ததால் மட்டுமே திருமணத்துக்கு சம்மதித்ததாகவும், 6 மாதத்தில் விவாகரத்து பெற்று தன்னை திருமணம் செய்து கொள்வதாக நடிகர் ஆர்யா பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் அரண்மனை-3, இரண்டகம் என்ற மலையாள படம் வெளியானால் தனக்கு வர வேண்டிய பணம் கிடைக்காமல் போகும் என வாதிட்டார்.
மேலும், சிபிசிஐடி'யிடம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
புகார் மீதான தற்போதைய நிலை குறித்து பதில் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி., தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி விசாரணையை ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.