‘கோமாளி’ படத்தை ரீமேக் செய்ய போனி கபூர் திட்டம்!
தமிழில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் 2019ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் ‘கோமாளி’. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தயாரிப்பாளரை மனமகிழவைத்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிருந்தார். இதில் கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, ஷாரா, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யவிருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது தமிழ் படங்கள் தயாரிப்பதிலும் ரீமேக் உரிமைகளை வாங்குவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார், அந்த வகையில் அவர் அடுத்து ‘கோமாளி’ படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது. இதில் ஜெயம் ரவியின் கேரக்டரில் அர்ஜுன் கபூர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
‘ஆரண்ய காண்டம்’ ஹிந்தி ரீமேக் பணிகள் துவங்கியது!
தியாகராஜன் குமாரராஜா இயக்குனராக அறிமுகமான படம் ‘ஆரண்ய காண்டம்’. எஸ்.பி.பி. சரண் தயாரித்த இந்தப் படம் 2011ல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. இதில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஷ்மின் பொன்னப்பா, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை அடையவில்லை, தமிழ் சினிமாவின் புதிய முயற்சியாக வந்த இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரவில்லை என்பதே இதற்கு காரணம். இருப்பினும் படத்துக்கு ஏராளமான விருதுகள் கிடைத்திருந்தது. குறிப்பாக படத்தின் எடிட்டரும், இயக்குனரும் தேசிய விருதுகளை வாங்கியிருந்தனர். படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தில் ஹிந்தி ரீமேக் பணிகளை துவங்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்த படத்துக்கான வேலைகளை துவங்க திட்டமிட்டுள்ளாக பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 3 முதல் ‘சியான் 60’ படப்பிடிப்பை துவங்கவுள்ளனர்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சியான் 60’. இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆக்ஷன் திரில்லராக உருவாகிவரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்த படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் வேலைகளை ஜூலை 3ஆம் தேதி முதல் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக படக்குழு கோவிட் தடுப்பூசி எல்லாம் போட்டுக் கொண்டு தயார் நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விக்ரமின் ‘கோப்ரா’ படத்திற்கு முன் இந்த படத்தின் வேலைகளை முடித்து ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.