மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாறன். தற்போது இவரின் புதிய படம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டும் கதிரை நாயகனாக வைத்து இயக்க இருக்கிறார் விக்ரம். இந்தப் படத்தை லிப்ரா ப்ரடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகரும், ஃபர்ஸ்ட் மேன் ஃபிலிம்ஸும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஏற்கெனவே விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் `ராவண கோட்டம்' படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் சாந்தனு நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். கதிரும், மலையாளத்தில் ரிலீஸான `இஷ்க்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.
இந்த இரண்டு பேரும் தங்களுடைய மற்ற கமிட்மென்ட்களை முடித்துவிட்டு இந்தப் படத்தில் இணைவார்கள் என சொல்லப்படுகிறது. மதயானை கூட்டம், விமர்சன ரீதியா பாராட்டு வாங்கியிருந்தாலும், வசூல் ரீதியாக அது ரொம்ப பெரிய வெற்றியடையவில்லை. அந்த வெற்றியை இந்தப் படம் கொடுக்கிறதா எனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதே நேரம், மதயானைக் கூட்டம் காம்போ மறுபடி இணைவதால், இந்தப் படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பும் உருவாகியிருக்கிறது.
தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 என இண்டு படங்களிலேயே தமிழ் சினிமாவில் பெரிய அளவு கவனம் குவித்தவர் இயக்குநர் சி.எஸ்.அமுதன். தமிழ்ப்படம் 2க்கு அடுத்து இவர் இயக்கப்போகும் படத்தைப் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.
விஜய் ஆண்டனி நடிப்பில் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்க இருக்கிறார் அமுதன். இந்தப் படம் துவங்கியது பற்றி அமுதன் கூறியபோது, "ஆக்சுவலா, நானும் - விஜய் ஆண்டனியும் காலேஜ் மேட்ஸ்ன்றதால, ரொம்ப வருஷமாவே சேர்ந்து ஒரு படம் பண்ற ஐடியால இருந்தோம். `நாக்க மூக்கா'ன்னு டைட்டில்லாம் வெச்சு ஒரு படம் பண்ண தொடங்க இருந்து, அப்பறம் முடியாம போச்சு.
ஆனா, இப்போ இந்த க்ரைம் த்ரில்லர் கதைய முடிச்சதும், இதுக்கு விஜய் ஆண்டனிதான் பக்காவா இருப்பார்னு தோணுச்சு, உடனே விஜய் ஆண்டனிட்ட ஃபோன்லயே பேசி ஓக்கே வாங்கிட்டேன். தமிழ்ப்படம் ரெண்டு பார்ட் பண்ணதால, காமெடி டைரக்டர்ன்ற முத்திரை தன் மேல விழுந்திருந்தாலும், எனக்கு எப்போவும் ரொம்ப பிடிச்சது த்ரில்லர் ஜானர்தான்.
இந்தப் படம் ஒரு ப்யூர் த்ரில்லரா இருக்கும். விஜய் ஆண்டனியோட டேட்ஸ பொறுத்து ஷூட் தொடங்க இருக்கோம். அநேகமா இந்தப் படத்தோட ஷூட்டிங் செப்டம்பர்க்கு மேல துவங்கும்" என கூறியிருக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கண்ணன் இசையமைக்கிறார்.
வழக்கமாக விஜய் ஆண்டனி படங்களுக்கு, சைத்தான், எமன், கொலைகாரன் என நெகட்டிவ் டைட்டில்தான் இருக்கும். அதை குறிப்பிடும்படி சமூக வலைதளத்தில் "இந்த விஜய் ஆண்டனி படத்துக்கு ஒரு பாசிட்டிவான டைட்டில சீக்கிரமே அறிவிக்கிறேன்" என தன்னுடைய வழக்கமான நகைச்சுவை பாணியில் பதிவிட்டிருந்தார்.