`பேட்ட' படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `ஜகமே தந்திரம்'. தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்ய லக்ஷ்மி, ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜூ ஜார்ஜ், கலையரசன், வடிவுக்கரசி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
பெரிய ஹீரோக்களின் படங்கள் ஓடிடி'யில் வெளியாகும் வரிசையில் ஜகமே தந்திரமும் இணைந்திருக்கிறது. இதை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்கள். அதன் படி படம் மே மாதம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது. வழக்கமாக இந்திய மொழிப் படங்கள் ஓடிடியில் வெளியாகும் பொழுது, பெரும்பாலும் ஆங்கில சப்டைட்டிலோடும், இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியாகும். ஆனால், `ஜகமே தந்திரம்' ஆங்கிலத்திலும் டப் செய்யபட இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் இந்தியா மொழி பார்வையாளர்களைத் தாண்டி உலகளவிலான பார்வையாளர்களை படம் சென்று சேரும். மே மாதம் என்ன தேதியில் படம் வெளியாகும் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தப் படத்தையடுத்து `சியான் 60' படத்தில் விக்ரம் - துருவ் விக்ரமை இயக்கிக் கொண்டிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் `மாநாடு'. பல தடைகளுக்குப் பிறகு இதன் படப்பிடிப்புகள் திட்டமிட்ட படி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்திற்காக வெளியிடப்பட்ட டீசரும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் டெனட் படத்தை ஒப்பிட்டு மீம்ஸ் வந்தது, அதற்கு வெங்கட் பிரபுவின் ரிப்ளே எல்லாம் நாம் அறிந்ததே.
தினமும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. சிம்பு படப்பிடிப்பின் இடைவேளையின் போது தரையில் படுத்து ஓய்வெடுத்த படம் கூட வைரலானது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி "நான் பார்த்தவரைக்கும் `மாநாடு' படம் சிலம்பரசனுக்கும், வெங்கட் பிரபுவுக்கும் ஒரு மைல்கல்லாக அமையும். இருவருக்கும், உடன் பணிபுரிந்த நடிகர்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என ட்வீட் செய்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.
ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ரிலீஸ் ரம்ஜானை ஒட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் அது பற்றிய உறுதியான தகவல் எதுவும் இல்லை. விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.