ஜோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜாயன் - சூரஜ் வெஞ்சாரமூடு நடித்து நேரடியாக நீஸ்ட்ரீம் ஓடிடி தளத்தில் வெளியான மலையாளப்படம் `தி க்ரேட் இந்தியன் கிச்சன்'. பெண் அடிமைத்தனத்தைப் பற்றி முகத்தில் அறையும் வண்ணம் கூறியிருந்த இந்தப் படம் பலராலும் பாராட்டப்பட்டது. இதனையடுத்து இந்தப் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதற்கான பேச்சும் எழுந்தது.
இந்தப் படம் இப்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் தமிழில் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதன் ஷூட்டிங் விரைவில் நிறைவடைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகம் பாராட்டபட்டதால், தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை அமேஸன் ப்ரைம் தங்களது தளத்தாலும் வாங்கி சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன் மூலம் படம் இன்னும் பலரை சென்று சேர்ந்திருக்கிறது.
அப்படி இந்தப் படத்தைப் பார்த்த இந்தி நடிகை ராணி முகர்ஜி தன்னுடைய பாராட்டை தெரிவித்திருக்கிறார். நடிகர் ப்ரித்விராஜுடன் ராணி இணைந்து, `ஐயா' என்கிற இந்தி படத்தில் நடித்திருந்ததால், அவர் மூலம் இயக்குநருக்கு தன்னுடைய பாராட்டை செய்தியை அனுப்பியிருக்கிறார். "ப்ரித்வி, நான் சமீபத்தில் `தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தைப் பார்த்தேன்.
படம் மிக அபாரமாக இருந்ததை உணர்ந்தேன். எனக்கு இந்தப் படம் மிக பிடித்திருந்தது. இந்திய சினிமாவில் சமீபத்திய படங்களில் மிக சிறந்த படத்தில் இது ஒன்று. என்னுடைய இந்த வாழ்த்து செய்தியை அந்த இயக்குநரிடம் கூறுங்கள்" என வாட்ஸ் ஆப் செய்தியை அனுப்பியிருக்கிறார் ராணி முகர்ஜி.
ஏற்கெனவே தமிழில் படம் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது. பாலிவுடின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் `யஷ் ராஜ் ஃப்லிம்ஸ்'ன் ஆதித்யா சோப்ரா மனைவிதான் ராணி முகர்ஜி. எனவே விரைவில் இந்தப் படம் பாலிவுடிலும் ரீமேக் ஆகுமா? என்ற கேள்விகள் பரபரத்துக் கொண்டிருக்கிறது.