மாநகரம், கைதி, மாஸ்டர் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நம்பிக்கைக்குரிய இயக்குநராகியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் `விக்ரம்' படத்தை இயக்குவதற்கான வேலைகளில் இருந்தார்.
தேர்தல் வேலைகளில் கமல் தீவிரமாக இருந்ததால் படப்பிடிப்பு உடனடியாக துவங்காமல் இருந்தது. மேலும் லோகேஷ் கனகராஜுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இப்போது தேர்தலும் முடிந்துவிட்டது, லோகேஷும் கொரோனா சிகிச்சை முடிந்து குணமாகிவிட்டார்.
விரைவில் இதன் படப்பிடிப்புகள் துவங்க இருக்கிறது. `விக்ரம்' படத்தில் முக்கியமான ரோலுக்காக ஃபகத் பாசிலிடம் பேசப்பட்டிருக்கிறது என படத்தின் டைட்டில் டீசர் வெளியான சில தினங்களில் இருந்து தகவல்கள் வந்துகொண்டிருந்தது.
அதன் பின்பு அந்த ரோலில் ராகவா லாரன்ஸ் நடிப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால், இப்போது ஃபகத் பாசில்தான் நடிக்கிறார் என்பதை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி செய்திருக்கிறார்.
ஏற்கெனவே ‘வேலைக்காரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி வில்லனாக நடித்தார் பகத். தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா படத்திலும் வில்லனாக நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து விக்ரம் படத்திலும் வில்லன் வேடத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.