தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் இசையமைத்துக் கொண்டிருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். தொடர்ச்சியாக படங்களில் பணியாற்றி வந்தாலும் தெலுங்கில் ஐந்து வருடங்களாக எந்தப் படத்துக்கும் இசையமைக்காமல் இருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
கடைசியாக கௌதம் மேனன் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு பைலிங்குவலாக உருவான `சாகசம் சுவாசகா சாகிபோ' (தமிழில் `அச்சம் என்பது மடைமையடா) படத்திற்கு இசையமைத்திருந்தார். 2016ல் இந்தப் படம் வெளியானது.
இதன் பின்னர், ஏ.ஆர்.ரஹ்மான் எந்த தெலுங்குப் படத்திலும் பணியாற்றவில்லை. தற்போது ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஒரு தெலுங்குப் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். தெலுங்கில் முன்னணி இயக்குநரும், நடிகை ரம்யாகிருஷ்ணனின் கணவருமான, கிருஷ்ண வம்சி இயக்கும் படத்தின் மூலம் தான் ரஹ்மானின் தெலுங்கு ரீ-என்ட்ரி நடக்க இருக்கிறது.
'அன்னம்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம் விவசாயம் பற்றியும் உணவு பற்றியும் பேசும் படமாக உருவாக இருக்கிறது. விரைவில் இதில் நடிப்பவர்கள் பற்றிய விவரம் வெளியாகும். இந்தப் படம் தவிர மணிரத்னத்தின் `பொன்னியின் செல்வன்', கௌதம் மேனனின் `நதிகளில் நீராடும் சூரியன்' போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.