கொரோனா ஊரடங்குக்குப் பிறகு தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதற்காக திரையரங்குகள் உள்ளிட்ட கேளிக்கை தொடர்பான அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பிற துறைகளைப் போன்று திரைத்துறையும் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருந்தது.
அந்த சமயத்தில், திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வெளியீட்டுக்காக காத்திருந்த திரைப்படங்களுக்கு அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஓ.டி.டி. தளங்களே பெரிதும் உதவின. சிறிய படங்களுக்கு உதவிகரமாக இருந்தாலும் நட்சத்திர நடிகர்களின் படங்களும் ஆன்லைனில் வெளியாக அது திரையரங்க உரிமையாளர்களிடையே பெரும் எதிர்ப்பையே சம்பாத்திருந்தது.
இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தாலும் கடுமையான கட்டுப்பாடுகளும் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இப்படி இருக்கையில் படங்களின் வெளியீடுகள் தொடர்ச்சியாக ஓ.டி.டி பக்கமே செல்வதால் ஒருசில மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் விதிகளை மீறி டிக்கெட்டுகள், உணவுப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பதும் நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள PVR Cinemas நிறுவனத்தின் தியேட்டரில் 60 ரூபாய் மதிப்புள்ள பட்ஜெட் கிளாஸ் டிக்கெட்டு கேட்ட பார்வையாளரிடம் ஃபுட் பேக்கேஜும் சேர்த்து வாங்க வேண்டும் அப்படியானால் மட்டுமே நீங்கள் கேட்ட பட்ஜெட் கிளாஸ் டிக்கெட் கிடைக்கும் என்று ஊழியர் நிர்பந்தித்திருக்கிறார்.
இதனால் கொதிப்படைந்தவர், நான் எதற்கு எனக்கு தேவையில்லாத உணவை வாங்க வேண்டும்? யார் சொல்லி இதை நடைமுறைப்படுத்தியுள்ளீர்கள்? அரசு ஏதும் அனுமதி அளித்திருக்கிறதா என அவர் ஊழியரை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து தியேட்டர் மேலாளரை அழைக்கும்படி வாடிக்கையாளர் கூறியுள்ளார்.
அதன் பிறகு வந்த மேனேஜரிடமும் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் வாடிக்கையளர். அதற்கு அந்த மேலாளரோ, “ரூல்ஸ்ஸை எல்லாம் யார் சார் மதிக்கிறாங்க?” என அலட்சிய தொனியில் பேசியுள்ளார். “நான் மதிப்பேன். நீங்க அதைச் செய்யலனாலும் செய்யவெப்பேன்” என மீண்டும் கறாராக தெரிவித்திருக்கிறார். பின்னர் வேறு வழியின்றி அவருக்கான சினிமா டிக்கெட்டை தியேட்டர் நிர்வாகம் கொடுத்திருக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அந்த வாடிக்கையாளர் பொன்முட்டையிடும் பார்வையாளர்களை தியேட்டர் நிர்வாகங்களே அறுத்துத் தள்ளிவிடுகிறது என குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது.