தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பல முன்னணி சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த நடிகை சித்ரா நேற்று சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து அவரது உடலை மீட்ட போலிஸார் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கணவர் ஹேமந்த், உறவினர்கள், உடன் பணியாற்றிய நடிகர், நடிகைகள் என அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரது தாயார் விஜயா, ஹேமந்த் தான் தன்னுடைய மகளை அடித்துக் கொன்றிருக்க வேண்டும் என கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.
அதில், “என் பொண்ணு தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழை இல்லை. தைரியமான பெண்தான். செவ்வாய்க்கிழமை அன்று ஃபோனில் இயல்பாகவே பேசினாள். பூந்தமல்லியில் உள்ள படப்பிடிப்பு தளத்தில் இருப்பதாக கூறினாள்.
என் மகள் சித்ராவுக்கும் ஹேமந்த் ரவிக்கும் பதிவுத் திருமணம் நடந்துள்ளது. மூன்று நாட்கள் எங்கள் வீட்டிலும் மூன்று நாட்கள் ஹேமந்த் உடனும் தங்கி வந்துள்ளார் சித்ரா. பிப்ரவரி மாதம் திருமணம் நடத்துவதற்காக அண்மையில்தான் நாங்களும் ஹேமந்தின் பெற்றோரும் மண்டபம் பார்த்து வந்தோம்.
அந்த ஹேமந்த் நல்லவனாகத்தான் இருந்தான். என் பெண்ணை ஏதோ செய்துவிட்டான். என் பெண்ணிற்கு நேர்ந்தது போல் யாருக்கும் ஏற்படக்கூடாது. மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில் இருப்பார். ஹேமந்த்தான் என் பெண்ணை அடித்து சாகடித்திருக்கிறான். அவனை விட்டுவிடக் கூடாது.” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், சித்ராவின் உடற்கூறாய்வு நடந்து முடிந்திருக்கிறது. பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் சித்ரா தற்கொலைதான் செய்துகொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே ஹேமந்திடம் போலிசார் நடத்திய விசாரணையின்போது அவர் முண்ணுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.
இதனால் சித்ராவின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.