தமிழகத்தில் வரும் நவம்பர் 10-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், வி.பி.எஃப் கட்டணப் பிரச்சனைக்கு முடிவு எட்டும் வரை, புதிய திரைப்படங்களை வெளியிட முடியாது என தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தெரிவித்தார்.
இதற்கிடையே இன்று திரையரங்குகள் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு :
* திரையரங்க வளாகத்திற்குள் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாதவர்களை திரையரங்கினுள் அனுமதிக்கக்கூடாது.
* திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்.
* திரையரங்குக்கு வெளியேயும், பொது இடங்களிலும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
* திரையரங்கின் நுழைவாயிலில் மக்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்.
* பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வரிசையில் வரும் வகையில் குறியீடுகள் போட வேண்டும்.
* திரைப்படத்தின் இடைவேளையின்போது மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
* ஒவ்வொரு திரைப்படக் காட்சிக்கும் இடையே போதுமான கால இடைவெளி இருக்க வேண்டும்.