பன்மொழிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 74. பாடகர் எஸ்.பி.பியின் அகால மரணம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் தனுஷ் பாடகர் எஸ்.பி.பியின் மறைவிற்கு விடுத்துள்ள இரங்கல் பதிவில் கூறியதாவது, “இந்தக் குரல், ஒவ்வொருவரின் வீட்டிலும் எப்போதும் எதிரொலிக்கும். உங்கள் குரல் எங்களைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைகளிலும் தொடரும். எல்லாவற்றிற்கும் நன்றி. அவரது குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது இரங்கல்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சிம்பு எஸ்.பி.பியின் மறைவுக்கு வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”எத்தனை ஆயிரம் பாடல்கள்?? பாடிக்கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால்?? சிட்டாய் பறந்து பறந்து குரலால் உலகம் வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனை நிகழ்த்திய குரல்களின் அரசன் “ என்றும் “விடைகொடுத்து மீண்டும் இந்த மண்ணில் வரவேற்கக் காத்திருக்கிறேன் பாடு நிலாவே…லவ் யூ” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் பதிவில் கூறியதாவது, “உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்... இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் “ என்றும் உங்கள் நினைவுகளுடன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் ”I will always miss you RIP" என்று குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இரங்கல் பதிவில் “ இசை உங்களை இழந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் தனது இரங்கல் செய்தியில் “இந்த தேசத்தின் குரல் இனி இல்லை .. ஆழ்ந்த சோகம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன் தனது இரங்கலில் கூறியதாவது " ஆழ்ந்த வருத்தம் .. உங்கள் கலைத்திறனுக்கும் உங்கள் கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.