பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு பிறகு இந்தி திரையுலகம் பெருமளவில் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. சுஷாந்தின் இறப்புக்கு பாலிவுட் உலகில் நிகழும் குடும்ப அரசியலே காரணம் என்று தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
பிரபல முன்னணி நடிகையான கங்கனா ரனாவத்தும் பாலிவுட்டில் தொடரும் நெப்போடிசத்திற்கு எதிராக பேசி வருகிறார். இது மேலும் சர்ச்சைகளுக்கு தீனிபோட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் அண்மையில், மும்பைக்கு வருவது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீருக்கு வருவது போல் உள்ளது என ட்விட்டரில் கங்கனா பதிவிட்டிருந்தார்.
இது தற்போது பூதாகரமாகி அவருக்கு ஒய் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்படும் அளவுக்கு பெரிதாகியுள்ளது. இந்த நிலையில், பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் கங்கனா ரணாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள படத்தில் இருந்து தாம் விலகுவதாகக் கூறி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “கங்கனா ரணாவத் நடிக்கவுள்ள படத்தில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளேன். இது தொடர்பான எனது நிலைப்பாட்டை தயாரிப்பு நிறுவன தரப்பிடம் தெரிவித்திருக்கிறேன். அவர்களும் அதனை புரிந்துகொண்டார்கள். படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள்” என பி.சி.ஸ்ரீராம் குறிப்பிட்டுள்ளார்.
அவரது ட்வீட்டுக்கு கலவையான கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஒரு புறம் துணிச்சலான முடிவு எனவும் மறுபுறம் அறநெறிகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.