ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மீண்டும் தியேட்டர்களில் திரைப்படங்கள் திரையிடுவதற்கு ஆதரவு தரும் வகையில் கிரிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ திரைப்படத்தை திரையரங்குக்குச் சென்று ரசித்துள்ளார். அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் மழைக்கு நடுவே காருக்குள் தியேட்டருக்கு செல்லும் காட்சிகளும், சாலையில் ரசிகர்களுக்கு கையசைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் காரிலிருந்து இறங்கி ‘டெனெட்’ திரைப்படத்தின் பெரிய விளம்பர பலகைக்கு அருகில் நின்று மீண்டும் திரையரங்குகளுக்கு வந்துவிட்டோம் எனச் சொல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும் அவர் திரையரங்கினுள் அமர்ந்து டெனட்டை கண்டுகளிக்கும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. மற்ற பார்வையாளர்களிடம் திரையரங்குக்கு மீண்டும் வந்திருப்பது நன்றாக உள்ளது எனத் தெரிவிக்கிறார். படம் முடிந்து அவர் திரையரங்கை விட்டு வெளியேறும் போது, ரசிகர் ஒருவர் படம் எப்படி இருந்தது என்று கேள்வி எழுப்பியபோது, நான் அதை விரும்பினேன் என டாம் குரூஸ் பதில் அளிக்கிறார்.
கொரோனாவுக்கு பின்பு திரையரங்குகளில் வெளிவரும் முதல் ஹாலிவுட் திரைப்படம் நோலனின் ‘டெனெட்’ என்பது குறிப்பிடத்தக்கது .
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தன்னுடைய ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை ஓடிடி-யில் வெளியிட இருக்கும் சூழலில், ஹாலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டாரான டாம் குரூஸ் திரையரங்குகளில் படங்களை திரையிடுவதற்கு ஆதரவு அளித்திருப்பது கவனிக்கதக்கது. உலக அளவில் திரைப்படங்களின் எதிர்காலம் திரையரங்குகளா அல்லது ஓடிடி தளங்களா என்ற விவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன.