நடிகர் உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக அருண்ராஜா குமாரராஜா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகுக்குக் 'கனா' படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். இவர் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ள தகவல் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரால் ட்விட்டரில் வெளியிடப்பட்டது.
இந்தியில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை உண்டுபண்ணிய ‘ஆர்டிகிள் 15’ திரைப்படத்தின் ரீமேக்கே இந்தப் புதிய படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ‘ஆர்டிகிள் 15’ திரைப்பட ரீமேக்கில் அஜித் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் ஏற்கெனவே போனி கபூரின் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில்தான் உதயநிதி கதாநாயகனாக ‘ஆர்டிகிள் 15’ ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இதுகுறித்து தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் “உதயநிதி நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் தமிழில் ஆர்டிகிள் 15 ரீமேக்கை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் நடிகர் உதயநிதியும் “ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்டோருடன் இணைவது உற்சாகமாக உள்ளது.” என ட்வீட் செய்துள்ளார்.
இந்தியில் வெளியான ‘ஆர்டிகிள் 15’ திரைப்படம் சட்டப்பிரிவு-15 ஐ மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறந்த இடத்தை மையமாக வைத்து நிகழ்த்தப்படும் எந்த விதமான பாகுபாட்டையும் அச்சட்டப்பிரிவு தடை செய்கிறது. அச்சட்டப்பிரிவு இந்திய சமூகத்தில் எப்படி மறக்கப்பட்டுள்ளது என்பதே ஆர்டிகிள் 15 திரைப்படம்.
இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்தார். மேலும் நாசர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிந்திருந்தனர்.