கொடைக்கானலில் உள்ள பேரிஜம் பகுதிக்கு அனுமதியின்றி நடிகர்கள் விமல், சூரி மற்றும் சினிமா இயக்குநர்கள் சென்று மீன் பிடித்து உள்ளனர். இதனையடுத்து அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்த இருவருக்கும் வனத்துறையினர் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
ஆனால் அவர்கள் இ-பாஸ் எடுத்து நகருக்கு வந்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறைக்கு புகார் மனு அளித்தனர். இதுகுறித்து கோட்டாட்சியர் சிவக்குமார் நடத்திய விசாரணையில் நடிகர்கள் உள்பட இயக்குநர்கள் அனைவரும் இ_பாஸ் இல்லாமல் கடந்த 15 ஆம் தேதி வந்தது தெரிய வந்துள்ளது.
மேலும், உள்ளூர் நபர் ஒருவர் உதவியுடன் அவர்கள் கொடைக்கானலில் தங்கி இருந்து பின்னர் பேரிஜம் வனப்பகுதிக்கு சென்று மீன் பிடித்தது தெரிய வந்தது எனவும் இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது பேரிஜம் பகுதிக்கு சென்ற அவர்கள் மீன் பிடித்து சமைத்து உண்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.
மேலும் எவ்வாறு நகருக்கு வந்தார்கள் என்பது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில் நடிகர்கள் பேரிடர் மேலாண்மை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் தொற்றுநோய் பரவும் சட்டம் ஆகியவற்றை மீறி வந்துள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து உரிய விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்யப்படும் என டி.எஸ்.பி தெரிவித்துள்ளதாக கோட்டாட்சியர் சிவக்குமார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து விமல், சூரி உள்ளிட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் எங்கு தங்கியிருந்தார்கள் என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
என்ன பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் இது வரை வெளியாகவில்லை. இது கொடைக்கானல் பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வனத்துறையில் ஏற்கனவே 3 வேட்டை தடுப்பு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யபட்ட நிலையில் அதனை தொடர்ந்து 2 வனக்காவலர்கள், 1 வனக்காப்பாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் வனத்துறையிலும் வேறு அதிகாரிகள் இந்த விசயத்தில் சிக்குவார்களா என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.