இரண்டாம் உலகப்போரை மையமாக வைத்து நிறைய படங்கள் ஹாலிவுடில் வெளியாகியுள்ளது. அவற்றில் ஒரு சில படங்களே அந்நாட்டின் அரசியலை தாண்டி, போர் வீரர்களின் கஷ்ட நஷ்டங்களையும் தாண்டி, பொதுமக்கள் அந்த போரினால் அடைந்த துயரத்தை காட்டுவதாக இருக்கின்றது. அந்த வகையான மனதை நெருடச் செய்யும் படம் தான் "சேவிங் பிரைவேட் ரியான்" . ஹாலிவுட்டின் பிரம்மாண்ட படமான "ஜுராசிக் பார்க்" படங்களை இயக்கிய "ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்" இயக்கத்தில், "டாம் ஹாங்க்ஸ்" கதாநாயகனாக நடித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் போது, நான்கு ஆண் பிள்ளைகளின் தாய் ஒருவர், தன் மூன்று பிள்ளைகளையும் கிட்டத்தட்ட ஒரே காலப் பகுதியில் இழந்து விடுகின்றாள். வீரர்களின் மரணம் பற்றி அறிவிப்பு செய்யும் பொழுது, தற்செயலாக இந்த தாய் அடைந்த இழப்பு தகவலை இராணுவ மேலிடம் கண்டறிகின்றது.
ஒரே நேரத்தில் தாய் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்து விட்ட காரணத்தால் நான்காவது மகனான "ரியான்" எதிரி நாட்டு எல்லையில் போர் புரிந்து வரும் தகவலை மேலிடம் கண்டறிந்து, அவரை மீட்டு தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கின்றது. அதற்காக ஒரு சிறப்பு படையையும் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இறங்குகிறது.
அந்த சிறப்பு படையின் கேப்டனாக மில்லர் (டாம் ஹாங்) என்பவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கேப்டன் மில்லர் தலைமையில் எட்டு வீரர்களைக் கொண்ட அணி ஒன்று எதிரியின் எல்லைகளை நோக்கி புறப்படுகின்றது. எதிரியின் எல்லைக்குள் போர் புரிந்து கொண்டிருக்கும் ரியானை, கேப்டனும் அவரது சகாக்களும் தமக்கு கிடைக்கும் துப்புக்களைப் பயன்படுத்தி தேடுதல் பணியை துவங்குகின்றனர்.
நாசிப் படைகள் ஒமாகா கடற்கரையிலேயே நிலைகொண்டிருக்கும் வேளையில், எதிரிகளின் எல்லையை ஊடறுத்து மில்லரும் அவரோடு வந்த படையினரும் முன்னேறுகின்றனர். ரியானை சந்தித்தார்களா இல்லையா என்பதும், எத்தனை வீரர்கள் தாயகம் திரும்புகின்றார்கள் என்பதுமே மீதிக்கதை.
இப்படத்தில் வன்முறை மற்றும் சண்டை காட்சிகள் மிகவும் கொடூரமாக பாவிக்கப்பட்டதால், முதலில் இத்திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை செய்யப்பட்டது. பல காட்சிகளை நீக்கிய பின்பே இதை இந்தியாவில் வெளியிட முடியும் என இந்திய சென்சார் போர்ட் அறிவித்தது, இந்த தகவலை கேட்ட ஸ்பீல்பெர்க் இப்படத்தை இந்தியாவில் வெளியிட வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார். பின்னர், இத் திரைப்படத்தை அப்போதைய இந்திய உள்துறை அமைச்சர் பார்த்து விட்டு, காட்சி நீக்கங்கள் ஏதுமில்லாமல் வெளியிட உத்தரவிட்டார்.
இத்திரைப்படம் 1998-ஆம் ஆண்டில் ஹாலிவுட்டின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதை 'சிறந்த இயக்குனர்' உட்பட 5 விருதுகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது!