மக்களிடையே நிலவும் சாதிய பாகுபாடுகளை ஒழிப்பதற்காக அரசியல் தலைவர்கள், இயக்கத்தினர் என பல தரப்பில் இருந்து அதற்கான போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது.
இருப்பினும் ஆணவக்கொலைகள், ஏற்றத்தாழ்வு போன்றவற்றை சீர்செய்வதில் பெரும் சவாலாக உள்ளது. இப்படி இருக்கையில், கந்த சஷ்டி விவகாரத்தை அடுத்து பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியது போன்ற செயல்கள் சமுதாயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு இல்லையென மத்திய அரசு அறிவித்திருந்தது மற்றுமொரு அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுவெளியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்கள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் அதிகரித்துக்கொண்டே வருவது மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மெட்ராஸ், பரதேசி, கபாலி, ஒருநாள் கூத்து, டார்ச் லைட் என பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை ரித்விகாவை சமூக வலைதளத்தில் ஒரு நபர் சாதியை குறிப்பிட்டு கீழ்த்தரமாக பதிவிட்டிருந்தார். இதற்கு அப்போதே ரித்விகா தக்க பதிலடி கொடுத்தற்கு பிற நெட்டிசன்கள் பாராட்டியிருந்தனர்.
தற்போது இது தொடர்பாக ட்விட்டரில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார் நடிகை ரித்விகா. அதில், “இது போன்று எனக்கு வரும் விமர்சனங்கள் புதிதல்ல.
ஒரு வகையில் நானும் தலித்தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனில் பெண்ணாகிய நானும் தலித் தானே. காலங்காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர் தானே. ஆம் தலித்.” இவ்வாறு அவரது பதிவு நீள்கிறது.
பின்குறிப்பாக தலித் பெண்கள் என்னைவிட அழகு எனவும் ரித்விகா குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பலர் பாராட்டி வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். இருப்பினும் சிலர் காழ்ப்புணர்ச்சியோடும் பதிவிட்டு வருகின்றனர்.