ஆன்லைன் தளங்களில் வெளியாகும் வெப் சீரிஸ்களுக்கு மக்களிடையே பெரியளவில் மவுசு அதிகரித்துள்ளதால், படங்களுக்கு இணையாக வெப் சீரிஸ்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஊரடங்கு என்பதால் அதற்கான பார்வையாளர்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர்.
அவ்வகையில், பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் OTT தளமாக ஜீ5 செயல்படுகிறது. அதில், தாஸ், தமிழரசன் போன்ற படங்களை இயக்கிய பாபு யோகேஸ்வரன் என்பவர், இளங்கோ ரகுபதியின் தயாரிப்பில் 'காட்மேன்' என்ற சீரிஸை இயக்கியுள்ளார். அதில், பிரபல நடிகர்கள் டேனியல் பாலாஜி, ஜெயபிரகாஷ், நடிகை சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜூன் 12ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாக இருந்த இந்த சீரிஸின் டீசர் கடந்த வாரம் ரிலீஸ் செய்யப்பட்டது. சுமார் ஒரு நிமிடம் இருக்கக்கூடிய அந்த டீசரில் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக குற்றஞ்சாட்டி பா.ஜ.க மற்றும் இந்துத்வ கும்பலைச் சேர்ந்தவர்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.
இதனால், டீசரை தனது தளத்தில் இருந்து நீக்கிய ஜீ5 நிறுவனம், சீரிஸ் வெளியீட்டையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களிலும் ‘காட்மேன்’ வெப் சீரிஸை தடை செய்யக் கோரி புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், சென்னையிலும் இதேபோல் புகாரளித்ததின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “வெப் சீரிஸின் தயாரிப்பாளர் இளங்கோ ரகுபதி, இயக்குநர் பாபு யோகேஸ்வரன் மற்றும் தொடரில் நடித்த நடிகர் நடிகைகள் என அனைவருக்கும் இந்துத்வ அமைப்பினர் என பலரும் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அச்சுறுத்தும் வகையில் கீழ்த்தரமாக பேசி வருகின்றனர்.
நான்கைந்து நாட்களாக காலை இரவு என நேரம் பாராமல் இந்த வசைபாடும் நிகழ்வு தொடர்ந்து வருகிறது. இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டு வருகிறது. காட்மேன் தாயாரிப்பாளரை கிறிஸ்துவர் என சித்தரித்து, இந்தத் தொடர் தயாரிப்புக்கு பின்னால் மதக்கலவரத்தை தூண்டும் சதி நடக்கிறது என்றும் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர்.
குறிப்பிட்ட அந்த டீசரில் இடம்பெற்றிருந்த வசனங்களின் உண்மைத் தன்மை என்ன, ஒட்டுமொத்த சீரிஸின் கதை என்ன, என்பது பற்றி எந்தப் புரிதலும் இல்லாத நிலையில், இப்படி ஒரு வெப்சீரிஸ் பிராமண சமுதாயத்துக்கும், இந்து மதத்துக்கும் எதிரானது என்ற கருத்தை உருவாக்கி, அந்த படைப்பையே தடைகோரும் பாசிச நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இத்தகைய பிராமண சங்கங்கள் மற்றும் செல்வாக்கு மிக்க தனி நபர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த ஊடக உலகமும் திரளவேண்டிய ஒரு அபாயகரமான சூழல் உருவாகியிருக்கிறது.
இதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கைகள், அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள கருத்து சுதந்திரத்தை முற்றிலும் பறிக்கிறது. ஆகவே, இப்போது ‘காட்மேன்’ தொடர் தடை செய்யப்பட்டால் எதிர்காலத்தில் யார் வேண்டுமானாலும் தலையிட்டு எந்த படைப்பையும் திரைக்கு வரும் முன் தடுத்து நிறுத்திவிடும் நிலை ஏற்படும்.
ஆகவே, இதனை தடுக்கும் விதமாக காட்மேன் சீரிஸ் ஜீ5 தளத்தில் வெளியாவதற்கு உறுதுணையாகவும், ஜனநாயக சூழலை தொடர்ந்து நிலைநிறுத்தும் முயற்சியாகவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பாளர்களின் சதியையும் மூர்க்கத்தையும் தடுத்து நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவ்வகையில், இந்தக் கோரிக்கை விண்ணப்பத்தையே ஒரு கையெழுத்து இயக்கமாக மாற்றி இந்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும், பிரதமரின் அலுவலகத்துக்கும், தமிழக முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு செல்வோம்.” என காட்மேன் வெப்சீரிஸ் குழு குறிப்பிட்டுள்ளது.