மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ். தமிழில் ‘மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். டொவினோ தாமஸ் தற்போது 'மின்னல் முரளி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பசில் ஜோசப் இயக்கும் இப்படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படம் மலையாளம் தவிர, தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் உருவாகி வருகிறது.
‘மின்னல் முரளி’ படத்துக்காக எர்ணாகுளம் அருகில் உள்ள கலடியில் ஆற்றின் ஓரத்தில் தேவாலயம் செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செட் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஷூட்டிங் தடைபட்டுள்ளதால், ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் ஷூட்டிங் நடத்த முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், அகில இந்து பரிஷத், ராஷ்ட்ரிய பஜ்ரங் தள் ஆகிய இந்து அமைப்புகள் படத்திற்காக அமைக்கப்பட்ட தேவாலய செட்டை சரமாரியாக அடித்து உடைத்துள்ளனர்.
செட்டை அடித்து நொறுக்கும் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ராஷ்ட்ரிய பஜ்ரங் தள் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹரி பலோட், “இந்த செட் ஆதி சங்கராச்சாரியா மடத்துக்கு அருகில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளதால் உடைத்தோம்” என்று கூறியுள்ளார்.
இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனுமதி பெற்றே செட் அமைக்கப்பட்டதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி சீட்டையும் வெளியிட்டுள்ளனர். மத வெறியால் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பதாக பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் பசில் ஜோசப், “இந்த இக்கட்டான நேரத்தில் இப்படியொரு சம்பவம் நடத்திருப்பது துரதிர்ஷ்டமானது. நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டிய காலகட்டம் இது. கேரளாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள படத்தின் கதாநாயகன் டொவினோ தாமஸ், “இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது, மேலும் கவலை அளிக்கிறது. சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.