மோகன்லால் - மீனா நடிப்பில் மலையாளத்தில் 2013ம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் த்ரில்லர் கதையாக அமைந்த இந்தப் படம் கேரள அரசின் விருது பெற்றதோடு மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.
அதன் பிறகு, தமிழில் கமல்ஹாசன் - கவுதமி நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதன் பிறகு, தெலுங்கு, இந்தி, கன்னடம் என இந்திய மொழிகள் தாண்டி சிங்களம், சீன மொழிகளிலும் ‘த்ரிஷ்யம்’ படம் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியைக் கண்டது.
இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு ‘த்ரிஷ்யம்’ படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இன்று மோகன்லாலின் 60வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி, அவரே தனது சமூக வலைதளங்களில் ‘த்ரிஷ்யம் 2’ படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
முதல் பாகத்தில் பாலியல் தொல்லை கொடுத்த போலிஸ் உயரதிகாரியின் மகனை மீனாவும் அவரது மகளும் இணைந்து கொலை செய்ததை அடுத்து தன்னுடைய குடும்பத்தை அந்தக் கொலையில் சிக்கிக் கொள்ளாத வகையில் மோகன்லால் பாதுகாக்கும் விறுவிறுப்பான திரைக்கதையை த்ரிஷ்யம் படம் கொண்டிருக்கும்.
படத்தின் இறுதியில் கொல்லப்பட்ட அந்த இளைஞனை புதிதாக கட்டப்பட்ட காவல் நிலையத்திற்கு அடியில் மோகன்லால் புதைத்தது போன்று படம் முடிவடையும். அதன் பிறகு அந்த காவல் நிலையத்துக்கு புதிதாக வரும் போலிஸார் கொலையாளியையும், கொல்லப்பட்ட இளைஞனின் உடலையும் கண்டறிவது போன்று கதையம்சம் இருப்பது போல் அடுத்த பாகம் அமையும் எனக் கூறப்படுகிறது.
ஆகவே, கொரோனா ஊரடங்கு முடிந்தபிறகு ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் வேலைகள் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கிறார் என்பது மட்டுமே தெரியவந்துள்ளது. விரைவில் இது தொடர்பான விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, த்ரிஷா-மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ‘ராம்’ என்ற படம் உருவாகி வந்தது. வெளிநாடுகளில் ஷூட்டிங் எடுக்கவேண்டி இருப்பதால் தற்போது கொரோனா காரணமாக அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.