பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் திடீர் மறைவுக்கு இந்திய திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்கள் இர்ஃபான் கானின் நினைவலைகள் கொண்ட பதிவுகளால் நிறைந்து கிடக்கிறது. இந்நிலையில், மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ஃபகத் ஃபாசில் இர்ஃபானின் மறைவு குறித்தும், தன்னுடைய சினிமா வாழ்வுக்கு வித்திட்ட இர்ஃபானின் நடிப்புத் திறமை குறித்தும் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது அந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் தீயாய்ப் பரவி வருகிறது.
இதோ, அந்தக் கடிதத்தின் விவரம்:
“பல ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் பொறியியல் படித்துக் கொண்டிருந்த சமயம். அந்த சமயத்தில் நடந்த மிகவும் நெருக்கமான நிகழ்வு. அப்போது, ‘யோ ஹோயா தோ கியா ஹோதா’ படத்தை பார்க்குமாறு கல்லூரிக்கு அருகே இருந்த கடைக்காரர் பரிந்துரைத்தார்.
நஸ்ருதீன் ஷா இயக்கத்தில் உருவானது என்பதை தவிர வேறெதுவும் அந்தப் படம் குறித்து அறிந்திருக்கவில்லை. அப்போது, சலிம் ராஜாபலி கதாபாத்திரத்தில் வந்த நடிகர் குறித்து என் நண்பரிடம் கேட்டேன். எவ்வளவோ தீவிரமான, அழகான, ஸ்டைலான நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவ்வளவு அசலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆம், அந்த நடிகரின் பெயர்தான் இர்ஃபான் கான்.
சினிமாவில் அவரது அர்ப்பணிப்பு குறித்து நான் தாமதமாகவே அறிந்துக்கொண்டேன். அதன் பிறகு, இர்ஃபானின் படங்களை தொடர்ந்து பார்க்கத் தொடங்கினேன். அவருடைய வளர்ச்சி பிரபலமான பாடலைப் போன்றது. இர்ஃபானின் வளர்ச்சியை அனைவரும் உணரத்தொடங்கினார்கள். நடிப்பை அவர் மிகவும் எளிதாக்கினார்.
பின்னர், திரைப்படங்களில் நடிப்பதற்காக பொறியியல் படிப்பை கைவிட்டு, இந்தியாவுக்கு திரும்பினேன். கடந்த 10 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன் அல்லது நடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரையில் இர்ஃபான் கானை சந்தித்ததில்லை. ஆனால், அவர் படங்களில் நடித்தவர்களுடன், பணிபுரிந்தவர்களுடன் நடிக்கும் அதிர்ஷ்டம் மட்டுமே கிட்டியது.
எங்கள் சொந்த ஊரில் என் நண்பர் துல்கர் சல்மான் இர்ஃபான் கானுடன் படப்பிடிப்பில் இருந்தபோதும் கூட, என்னுடைய இதர வேலைகளால் அவரைச் சந்திக்க முடியாமல் போனது. அப்போதும் கூட எதற்கு இவ்வளவு அவசரப்படவேண்டும் எனத் தோன்றியது. ஆனால், அன்று அவரை சந்திக்காமல், அவரது கைகளை குலுக்காமல் போனது குறித்து வருத்தமளிக்கிறது. அப்போதே மும்பைக்குச் சென்று அவரை சந்திருக்க வேண்டும்.
இர்ஃபானின் இழப்பால் வெற்றிடத்தை உணரும் அவருடன் பணியாற்றிய திரைப்படத் துறையினரை நினைத்து வருந்துகிறேன். இர்ஃபானுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அன்று அவருடைய படத்தை பார்த்திருக்காவிட்டால் நான் இதுவரை வந்திருப்பேன் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என்னுடைய வாழ்க்கையை மாற்றிய நடிகர் அவர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.