சினிமா

“மதங்களை கடந்து மனிதமே முக்கியம்” - ஜோதிகாவின் கருத்தில் மாற்றமில்லை - நடிகர் சூர்யா பதிலடி!

கோவில்களில் காணிக்கை செலுத்துவதற்கு பதில், மருத்துவமனைகள், பள்ளிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாம் என்ற ஜோதிகாவின் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

“மதங்களை கடந்து மனிதமே முக்கியம்” - ஜோதிகாவின் கருத்தில் மாற்றமில்லை - நடிகர் சூர்யா பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘ராட்சசி’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை ஜோதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது. இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் டி.வியில் ஒளிபரப்பப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில், தஞ்சை பெருவுடையார் கோவிலோடு ஒப்பிட்டு பள்ளி, மருத்துவமனைகளின் தேவை குறித்துப் பேசியிருந்தார். கோவில்களுக்கு காணிக்கைகளை செலுத்துவதற்குப் பதில், மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் உதவலாம். உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம் என கருத்து தெரிவித்திருந்தார்.

அவரது கருத்து சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளுக்கு ஆளாகி சர்ச்சையாக வெடித்தது. எஸ்.வி.சேகர் போன்ற தாங்கள்தான் இந்து மதத்தின் அடையாளம் என கூறிக்கொண்டிருக்கும் பலர் ஜோதிகாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், கடுமையாக விமர்சித்தும் வந்தனர்.

ஆனால், எஸ்.வி.சேகரோ வழக்கம்போல் தனது பதிவுக்கு எதிர்ப்பு கிளம்பியதும் அதனை ட்விட்டரில் இருந்து நீக்கிவிட்டார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா, ஜோதிகா தெரிவித்த கருத்தில் எந்த மாறுபாடும் இல்லை. அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம் எனக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘மரம் சும்மா இருந்தாலும், காற்று விடுவதாக இல்லை’ என்பது சமூக வலைதளங்களில் நடக்கும் விவாதங்கள் பொருந்தும். ஜோதிகா கூறியதை பலர் குற்றமாக பார்க்கிறார்கள். ஆனால், இதே கருத்தினை விவேகானந்தர் போன்ற ஆன்மிக பெரியவர்களும் கூறியிருக்கிறார்கள்.

மக்களுக்கு உதவி செய்தால், அது கடவுளுக்கு செலுத்தும் காணிக்கைக்கு சமம் என்பது திருமூலரின் சிந்தனையாகும். இது போன்ற நல்லதோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து, கேட்காதவர்களுக்கு இவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம். நல்ல எண்ணெங்களை விதைத்து, நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்இற நம்பிக்கையை துளிர்க்கச் செய்து, எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்” என நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கைக்கு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

banner

Related Stories

Related Stories