கொரோனா அச்சம் காரணமாக நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் மூலம் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும், ஏழை எளிய மக்களின் பசிப்பிணியை கட்டுப்படுத்த முடியாத அவல நிலை உருவாகியுள்ளது.
அன்றாடம் தொழில் புரிந்தால் மட்டுமே பணம் ஈட்டி சாப்பிட முடியும் என்ற நிலையில் இருக்கும் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு இந்த ஊரடங்கு சொல்லிலடங்காத் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் சென்றவர்கள் உணவும், தண்ணீரும் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புவி வெப்பமயமாதம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக சர்வதேச இசையமைப்பாளர்களுடன் இணைந்து Hands Around The World என்ற பாடலுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கப்பெறும் தொகை காலநிலை மாற்றத் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது அதற்கான அறிமுக நிகழ்வு பூமி தினமான நேற்று இன்ஸ்டாகிராம் நேரலை மூலம் நடத்தப்பட்டது. அப்போது, ஏ.ஆர்.ரஹ்மானும், இந்த திட்டத்தில் அங்கம் வகிப்பவருமான நீல் மோர்கனும் நேரலையில் உரையாடினர்.
கொரோனாவால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், உலகெங்கும் மாசில்லாத காற்று கிடைக்கப்பெறுகிறது என்றும், பூமி தன்னை புதுப்பித்துக் கொண்டு வருகிறது என்று நீல் மோர்கன் கூறினார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ஊரடங்கு குறித்து பேசும்போது, இந்தியாவில் அன்றாடம் வேலைக்குச் சென்று பணம் சம்பாதித்து சாப்பிடுவோர் ஏராளமானோர் இருக்கின்றனர். இந்தச் சூழலில் அவர்கள் உணவுத் தேவைக்கு என்ன செய்வார்களோ என்று நினைக்கும்போது என்னால் தூங்க முடியவில்லை என மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார்.