உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,515 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 157 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,69,415 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வைரஸ் கிருமி இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் தற்போது வரை 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலையடுத்து, வருகிற மார்ச் 19ம் தேதி முதல் சின்னத்திரை உட்பட அனைத்து விதமான படப்படிப்பும் ரத்து செய்யப்படுவதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி வடபழனியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனா வைரஸ் அனைவரிடமும் பயத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. திரைப்படங்களில் காணும் காட்சி போல் கொரோனா வைரஸ் நிஜத்தில் அச்சுறுத்தி வருகிறது.
இந்தச் சூழலில் படப்படிப்பு தளத்தில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் சுகாதார வசதி குறைவால், தொடர்ந்து பணி செய்தால் ஆபத்து வரும் என அச்சம் ஏற்படுகிறது. இதனால் சின்னத்திரை உட்பட அனைத்து படப்பிடிப்புகளும் வரும் மார்ச் 19ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் படப்படிப்பு நடைபெறுவதால் அவர்களது கோரிக்கையை கருத்தில் கொண்டு 19ம் தேதி முதல் படப்பிடிப்பு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.