லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலான ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
படத்தின் ‘குட்டி ஸ்டோரி’ என்ற ஒரே ஒரு சிங்கிள் ட்ராக் வெளியானதை அடுத்து அடக்கமுடியாத உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். இதனையடுத்து, படத்தின் படப்பிடிப்பு வேறு முடிந்திருப்பதால் இனி அடுத்தடுத்து ‘மாஸ்டர்’ படத்தின் மாஸான அப்டேட்டுகள் வரும் என விழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறார்கள்.
மேலும், கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 9ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு சூசகமாக பதிலளித்துச் சென்றிருக்கிறார்.
இந்நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அண்மைக்காலமாக வெளிவந்த விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழா அவரது ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
அப்போது விஜய்யின் பேச்சுக்காகவே கூட்டம் குவியும். அதுபோல, கடந்த முறை ‘பிகில்’ பட ஆடியோ வெளியீட்டின் போது ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் கூச்சல் குழப்பம் நிலவியது.
ஆகையால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடாத வண்ணம் இம்முறை மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற மார்ச் 15ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் டி.வி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், தகவல் வெளியானபடி வருகிற 15ம் தேதி பட ஆடியோ வெளியீட்டு விழா மாலை 6.30 மணிக்கு நேரலையாக ஒளிபரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து குஷியான ரசிகர்கள் #MasterAudioLaunch என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கெனவே மாஸ்டர் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டி.வி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.