1996ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வருகிறது ‘இந்தியன் 2’. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
காஜல் அகர்வால், சித்தார்த், நெடுமுடிவேணு, ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா எனப் பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்தியா, வெளிநாடுகள் என பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடத்துவதற்காக அண்மையில் செட் அமைக்கப்பட்டது.
அப்போது ராட்சத க்ரேன்களின் மூலம் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் முறையான பயிற்சியின்றி ஊழியர் ஒருவர் கனரக க்ரேனை இயக்கி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் ஷங்கரின் உதவியாளர் மது, கிருஷ்ணா, சந்திரன் என மூவர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் கோலிவுட் அரங்கில் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து கமல்ஹாசன் மற்றும் லைகா சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
இதற்கிடையே, நீண்ட நெடிய சர்ச்சைகளுக்குப் பிறகு சிம்புவின் ‘மாநாடு’ படம் தொடங்கியுள்ளது. இது சிம்பு ரசிகர்களை மகிழ்வித்திருந்தது. அதுபோல, ‘மாநாடு’ படப்பிடிப்பு தளத்தில் பணியாளர்களின் நலனுக்காக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எடுத்துள்ள நடவடிக்கையும் கோலிவுட் வட்டாரத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அது என்னவெனில், ‘இந்தியன் 2’ படத்தின் ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட உயிரிழப்பு எதிரொலியாக ‘மாநாடு’ படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ப்ரீமியம் தொகையாக 7.8 லட்சம் ரூபாய் செலுத்தி 30 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்துள்ளார் சுரேஷ் காமாட்சி.
இந்தச் செயல் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு அனைத்து தயாரிப்பாளர்களும், இந்த காப்பீடு முறையை பின்பற்றவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது.