நடிகர் விஜய், ஏ.ஜி.எஸ் நிறுவனம், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய்யின் 'பிகில்' படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வரும் நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்றது. ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று நெய்வேலியில் நடந்த 'மாஸ்டர்' படப்பிடிப்பின்போதே நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும், நடிகர் விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 'படப்பிடிப்பு முடிந்ததும் நானே நேரில் வருகிறேன் 'என்று அதிகாரிகளிடத்தில் விஜய் கூறியதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், உடனடியாகத் தங்கள் காரில் வர வேண்டும் என கெடுபிடி காட்டியுள்ளனர்.
நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் இவ்வளவு கடுமையாக நடந்துகொண்டதற்கு மத்திய பா.ஜ.க அரசே காரணம் எனவும் அவரது ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் ‘பிகில்’ படத்திற்கு கடனுதவி செய்த கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியனின் சென்னை, மதுரையில் உள்ள வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தி.நகரில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் ரூபாய் 50 கோடியையும், மதுரையில் உள்ள வீடு, அலுவலகங்களில் இருந்து ரூபாய் 15 கோடி என கணக்கில் வராத ரூபாய் 65 கோடி ரூபாயை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வருமான வரி சோதனைகளுக்குப் பின்னணியில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க அரசின் சதி வேலை இருப்பதாக பலரும் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.