பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ம் தேதி வெளியான படம் ரஜினியின் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அனிருத் இசையில் உருவான ‘தர்பார்’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் ரஜினியின் படம் என்பதாலேயே மக்கள் மத்தியில் சற்று வரவேற்பு கிடைத்தது.
இருப்பினும் தயாரிப்பாளருக்கே ஓரளவு வெற்றிப் படமாக மட்டுமே அமைந்துள்ள நிலையில் விநியோகஸ்தர்கள் போட்ட முதலீட்டை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 சதவிகிதம் அளவுக்கு தர்பார் படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் முருகதாஸை சந்திக்க முயற்சித்து அதிருப்தி அடைந்து, நேராக போயஸ் கார்டனுக்குச் சென்று ரஜினி சந்திக்க எத்தனித்துள்ளனர்.
ஆனால் அங்கு அவர்களை அனுமதிக்காததால் ரஜினியை சந்திப்பதற்காக இன்று நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படியும் தீர்வு கிடைக்காவிடில், தர்பார் படத்தால் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என ஊடகங்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.