‘தி பியானோ டியூனர்’ என்ற பிரெஞ்சு நாவலை தழுவி, இந்தியில் க்ரைம் த்ரில்லர் கதையாக உருவான படம் அந்தாதுன். இதில், ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வெறும் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 450 கோடிக்கு மேல் வசூல் வேட்டையை நிகழ்த்தியது.
மேலும், இந்த படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த படம் மற்றும் சிறந்த திரைக்கதை என 3 தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியாவில் மட்டுமல்லாமல், சீனாவிலும் அந்தாதுன் படம் வெளியாகி பாராட்டையையும், வசூல் மழையையும் பொழிந்தது.
இந்நிலையில், அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றியதாக நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் அறிவித்தார். மேலும், லண்டன் ட்ரினிடி கல்லூரியில் தனது மகனும் நடிகருமான பிரசாந்த் பியானோ பயின்றிருப்பதால் அவரே ஆயுஷ்மான் கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என்றும் தியாகராஜன் கூறியிருந்தார்.
கவுதம் மேனன் அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது, கவுதம் மேனன் வெவ்வேறு படங்களில் பிசியாக இருப்பதால் அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்கவில்லை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆகையால், ஜெயம் ரவியின் சகோதரரான மோகன் ராஜா அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே மோகன் ராஜா இயக்கிய பெரும்பாலான படங்கள் ரீமேக்காக இருந்ததால் இதுவும் அவருக்கு கைகூடும் என கூறப்படுகிறது.
இருந்தாலும் அவரது சொந்த கதையாக வெளியான தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தின் நிலை என்னவானது என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.