சினிமா உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருது விழா வருகிற பிப்ரவரி 9ம் தேதி நடைபெறுகிறது. இது 92வது ஆஸ்கர் விருது விழாவாகும். இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவும் தொகுப்பாளர் இல்லாமல் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் ஹாலிவுட்டைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்நிலையில், ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், டாட் பிலிப்ஸ் இயக்கத்தில், ஜோக்குயின் போனிக்ஸ் நடிப்பில் வெளியான ‘ ஜோக்கர்’ படம் 11 பிரிவுகளிலும், தி ஐரிஷ்மேன், ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் ஹாலிவுட் மற்றும் 1917 ஆகிய படங்கள் 10 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு நெ7 படம் ஆஸ்கரில் ஒரு அங்கீகாரத்தை பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த நிலையில் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. இந்நிலையில், ஸ்மிரிதி முத்ரா மற்றும் சமி கான் ஆகியோர் உருவாக்கிய St.Louis Superman என்ற படம் ஆவணப்பட பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்க இயக்குநர்கள் ஆவர். 2014ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த கருப்பினத்தவர்களின் போராட்டங்களை மையமாக வைத்த இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த ஆவணப்படத்துக்கு 7 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் நாமினேஷனில் ஸ்மிரிதி முத்ரா மற்றும் சமி கானின் படங்கள் இடம்பெற்றிருப்பது அவர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆவணப்பட இயக்குநர்களுக்கு பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.