ஹாலிவுட் மட்டுமல்லாமல் சினிமா உலகிற்கே உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். இந்த விருதை பெறுவதற்காக உலகில் உள்ள அனைத்து மொழி படங்களும் போட்டியிடும்.
அந்த வகையில், 92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற பிப்ரவரி 9ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு, ஜனவரி 13ம் தேதி விருதுக்கு தேர்வாகியுள்ள படங்களின் நாமினேஷன் பட்டியலை ஆஸ்கர் குழு வெளியிடவுள்ளது.
வருடா வருடம் ஆஸ்கர் விருது விழாவை ஏதேனும் ஒரு சினிமா பிரபலம் தொகுத்து வழங்குவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழா தொகுப்பாளர் இல்லாமலே நடைபெற்றது.
இருப்பினும் அந்த நிகழ்ச்சி 29.6 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டிருந்தாலும் குறைந்தபட்ச பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சியாகவே கருதப்பட்டது.
அதேபோல, இந்த முறையும் ஆஸ்கர் விருது விழா தொகுப்பாளர் இல்லாமலேயே நடைபெறவுள்ளது என ஹாலிவுட் செய்திகள் தெரிவிக்கின்றன. தொகுப்பாளருக்குப் பதிலாக விருது விழா தொடங்குவதற்கு முன்பு பிரமாண்டமான முறையில் கலை நிகழ்ச்சிகளை நடத்த ஆஸ்கர் திட்டமிட்டுள்ளதாம்.
இதன் மூலம் கடந்த ஆண்டை விட 12 சதவிகித பார்வையாளர்கள் அதிகரிப்பாளர்கள் என எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.