ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘தர்பார்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படம் வருகிற, ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், ரஜினியின் தர்பார் படத்திற்கு தடை விதிக்க கோரி மலேசியாவை சேர்ந்த TMY கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ரஜினிகாந்த் நடித்திருந்த 2.O படத்தின் மலேசிய விநியோக உரிமையை லைகா நிறுவனத்திடம் இருந்து 20 கோடி ரூபாய்க்கு பெற்றதாகவும், படத் தயாரிப்புக்கு 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவிகித வட்டிக்கு கடனாக லைகா நிறுவனத்திற்கு வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது , அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயாக உள்ளது.
ஆகையால், தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை லைகா நிறுவனம் வழங்காவிட்டால் அந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்து வந்த நீதிபதி ஜெயச்சந்திரன், கடன் பாக்கியில் இருந்து ரூ.4 கோடியே 90 ஆயிரத்தை டெபாசிட் செய்யும் வரை மலேசியாவில் ‘தர்பார்’ படத்தை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டை போன்று வெளிநாட்டிலும் ரஜினிக்கு ரசிகர்கள் பட்டாளாம் ஏராளமாக இருக்கும். ஆகையால் மலேசிய ரசிகர்களை மனதில் வைத்து தயாரிப்பு நிறுவனம் டெபாசிட் பணத்தை செலுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்