வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் படம் கடந்த அக்டோபர் 4ம் தேதி வெளியானது. மஞ்சுவாரியர், டி.ஜே., பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
பஞ்சமி நில அபகரிப்பு, சாதிய ரீதியிலான கொடுமை தொடர்பாக பேசப்பட்டுள்ள அசுரன் படம் விமர்சனம் மற்றும் வர்த்தக ரீதியில் அமோக வெற்றியை பெற்றதோடு 80 நாட்களை கடந்து இதுகாறும் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும், பல்வேறு திரைப்பட விழாக்களிலும் அசுரன் படம் திரையிடப்பட்டு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.
திரைப்படமாக வெற்றி பெற்றதோடு, அசுரன் படத்தின் அடிப்படை கதையாக உள்ள எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலும் இந்த ஆண்டின் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அசுரன் படத்துக்கு கிடைத்த வெற்றியை போன்று, 2019ம் ஆண்டில் அமேசான் கிண்டலில் இந்தியாவில் அதிகமாக விற்கப்பட்ட இ-புக் பட்டியலில் பூமணியின் வெக்கை நாவலுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ட்விட்டரில் அமேசான் கிண்டில் இந்தியா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.