அட்லி - விஜய் கூட்டணியில் உருவான ‘பிகில்’ படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 25ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் 2019ம் ஆண்டின் ப்ளாக் பஸ்டர் படங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது ‘பிகில்’.
இருப்பினும் ‘அட்லி’ படம் என்றாலே பிறமொழி மற்றும் பழைய தமிழ்ப் படங்களின் காட்சிகள் அப்படியே ஒத்துப்போகும் அளவுக்கு இருக்கும் என அவரது ‘ராஜா ராணி’ படம் தொட்டு பேசப்பட்டுவருவது வழக்கம்.
அதேபோல், ‘பிகில்’ படத்திலும் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டு கதை என்பதால் இந்த முறை ஹாலிவுட் பக்கம் அட்லி தன் பார்வையைத் திருப்பியிருக்கிறார் எனக் கூறி பல்வேறு காட்சியமைப்புகளின் ஒற்றுமையை ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிட்டு அதனை நெட்டிசன்கள் அவ்வப்போது ஆதாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அண்மையில் வெளியான ‘பிகில்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் இதேபோன்ற விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. அதில், ஒழுங்காக விளையாடாத தங்கள் அணிப் பெண்களிடம் கோபமாக பேசியும், பாண்டியம்மா கதாபாத்திரத்தை கோபமாக திட்டியும், கோல் அடிக்க வைப்பது போன்று காட்சி இடம்பெற்றிருக்கும்.
அதேபோல, ஹாலிவுட்டில் 2004ம் ஆண்டு ஹாக்கி விளையாட்டை மையமாக கொண்டு வெளிவந்த Miracle என்ற படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலும் தன்னுடைய அணியினரை திட்டி கோபமடைய வைத்து பின்னர் குர்ட் ரஸ்ஸல் விளையாட வைப்பார்.
இந்த வீடியோவை பிகில் பட காட்சியுடன் இணைத்து இந்த சீனையும் காப்பி அடித்துதான் அட்லி எடுத்துள்ளாரா என நெட்டிசன்கள் கிண்டலடித்தும், விமர்சித்தும் வைரலாக்கி வருகின்றனர்.