தமிழ் சினிமாவில் கமர்சியல் சினிமாக்கள் அதிகமாக வெளிவரும் சமயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும், வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட மாற்று சினிமாவை எடுத்து வருபவர் இயக்குநர் வெற்றிமாறன்.
அந்தவகையில் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘வட சென்னை’. இந்தப் படம் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பிற மொழி சினிமா விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், வட சென்னை படத்தையும், வெற்றிமாறனையும் புகழ்ந்து அமெரிக்காவின் ஃபிலிம் கமென்ட் என்ற பத்திரிகை சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இதனைக் கண்ட பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் “அவரது நீண்ட கால உழைப்புக்கு சர்வதேச அளவில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்” என வெற்றிமாறனை புகழ்ந்ததோடு, இந்த அங்கீகாரத்துக்கு உரியவர் எனவும் பெருமிதமாக பதிவிட்டுள்ளார்.
சக படைப்பாளியை பாராட்டி பதிவிட்டிருந்த அனுராக் காஷ்யப்புக்கு வாழ்த்து கூறியதோடு, ரசிகர்கள் இயக்குநர் வெற்றிமாறனுக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, வட சென்னை படம் ரிலீஸ் ஆன சமயத்திலேயே வெற்றிமாறனை பாராட்டி அனுராக் காஷ்யப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.